Thiru Undhiyar. Undhee Pata Padhigam.


8.14 திருவுந்தியார்

8.14 திருவுந்தியார்

பின்னணி:

உந்தி என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சிறுமியர்கள் கீழே குத்துக்கால் இட்டு அமர்ந்தும், திடீரென்று பறவை போல் கைகளை விரித்துக்கொண்டு எழுந்து ஓடிச்சென்று, மறுபடியும் தங்களது கைகளை மடக்கிக்கொண்டு அமர்ந்தும், இவ்வாறு மீண்டும் மீண்டும் அமர்ந்தும் எழுந்தும் தொடர்ந்து விளையாடுவதை உந்தீ விளையாட்டு என்று கூறுவார்கள். மணிவாசக அடிகளார் மகளிரை முன்னிலைப்படுத்தி பாடிய பாடல்களின் வரிசையில் இந்த பாடலையும் வைத்துள்ளார். அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து குதித்து மீண்டும் அமரும் நிலைக்கு ஏற்றவாறு இந்த பாடல்கள் அமைந்துள்ளன.வளைந்தது வில்லு என்ற போது அமர்ந்தவர்கள் எழுவதும் விளைந்தது பூசல் என்ற போது கைகளை விரித்து குதிப்பதும், உளைந்தன முப்புரம் என்ற போது விரித்த கைகளை சிறகு போன்று அசைப்பதும் ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற என்ற போது அமர்வதும் ஆக செயல்கள் அமையும் வண்ணம் இயற்றப்பட்ட பாடல்கள். இந்த பதிகத்தின் பாடல்களில் பெரும்பாலும் பெருமானின் வீரச்செயல்கள் குறிப்பிடப் படுகின்றன. அதற்கு ஏற்றார் போல் வீறுகொண்டு எழுவது போன்று பண்ணிசைத்துப் பாடவேண்டும். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் உள்ள பெரியாழ்வார் திருமொழியில் உள்ள திருவுந்தியார் பாடலுக்கு,தலைவனின் வெற்றியை வாயாரப் புகழ்ந்து துள்ளிக் குதித்தவாறு மகளிர் பாடுதல் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. மணிவாசக அடிகளார், திரிபுரம் எரித்தது, தக்கனது வேள்வியை அழித்தது, பிரமனின் தலையைக் கொய்தது, அரக்கன் இராவணனின் செருக்கை அடக்கியது ஆகிய வீரச் செயல்களை இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். பெரியோர்கள் இந்த பதிகத்தின் உட்கருத்து ஞானவெற்றி என்று குறிப்பிடுகின்றனர். ந்மது எதிரிகளை வெற்றி கொள்வதற்கு இந்த பதிகம் ஓதவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

பாடல் 1:

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற

விளக்கம்:

பெருமான் வில்லை வளைத்த அந்த ஒரு நொடியிலே புரங்கள் மூன்றும் எரிந்தமையால், விளைந்தது பூசல் என்ற தொடர் மூலம் போர் நடைபெற்றது என்று குறிப்பிட்டாலும், உண்மையில் போர் ஏதும் நடைபெறவில்லை என்றே புராணங்கள் உணர்த்துகின்றன. மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க் கோட்டினில் இருக்கின்ற சமயத்தில் மட்டுமே அந்த கோட்டைகள் எரிக்கப்பட முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம். எனவே திரிபுரத்து அரக்கர்கள் அழியாமல் இருக்க வேண்டும் என்றால், ஒன்றை விட்டு மற்றவை விலகியிருந்தாலே போதும். ஆனால் அதற்கான கால அவகாசத்தை திரிபுரத்து அரக்கர்களுக்கு அளிக்காமல் பெருமான், அந்த கோட்டைகளை எரித்து அழித்தார் என்பது புலனாகின்றது. எனவே விளைந்தது என்ற சொல்லுக்கு தொடங்கியது என்று பொருள் கொள்வது பொருத்தம். வில்லு=மேரு மலையாகிய வில்; பூசல்=போர்; உளைந்தன=துயர் அடைந்தன; முப்புரம் என்ற சொல்லினை உளைந்தன மற்றும் ஒருங்குடன் வெந்தவாறு ஆகிய இரண்டு தொடர்களுடன் கூட்டி பொருள் கொள்ளவேண்டும். பெருமான் தான் ஏந்தியிருந்த வில்லினை வளைத்து போர் தொடங்கிய அந்த நொடியிலேயே, வில் அம்பிலிருந்து விடுபட்டு மிகவும் வேகமாக மூன்று கோட்டைகளையும் துளைத்துச் சென்று அழித்தது என்பதால், பெருமான் வில்லினை வளைத்த செயலை திரிபுரத்து அரக்கர்கள் உணரும் முன்னமே, அந்த கோட்டைகளை நோக்கி ஏவப்பட்ட அம்பு தனது செயலை முடித்து விட்டது என்பதால், அந்த அரக்கர்கள் போரிடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதற்கு முன்னரே அவர்களது மூன்று கோட்டைகளும் அழிந்துவிடுகின்றன. இருவரும் ஒருவரை எதிர்த்து போரிட்டால் தானே சண்டை நடந்தது என்று நாம் சொல்லமுடியும்.

பொழிப்புரை:

பெருமான் தான் ஏந்தியிருந்த வில்லினை வளைத்து அம்பினை எய்து போரினைத் தொடங்கிய அந்த நொடியே, வில்லிருந்து விடுபட்ட அம்பு மூன்று கோட்டைகளையும் துளைத்து ஒருங்கே தீயினில் வேவச்செய்து, அந்த கோட்டைகளிலிருந்த அரக்கர்களை துயரடையச் செய்து அழித்தது. மிகவும் துரிதமாக செயல்பட்ட பெருமானின் ஆற்றலையும் மூன்று கோட்டைகளையும் ஒரே சம்யத்தில் அழித்த வீரச்செயலை பாடிய வண்ணம் நாம் உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 2:

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற

விளக்கம்:

முப்புரம் என்பது மும்மல காரியம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். மூல மலமாகிய ஆணவ மலத்தினை அறியாமை என்று கூறுவார்கள். அறியாமையாகிய ஆணவ மலத்தினை ஞானம் கொண்டே அடக்க முடியும். பரஞானமாக விளங்கும் பெருமான், மலங்களை அழித்தான் என்பதையே பெருமான் முப்புரம் எரித்ததாக கூறுகின்றனர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அறியாமையை அழிக்க வில் அம்பு வாள் படைக்கலம் போன்ற படைக்கலங்கள் தேவையில்லை. ஞானம் ஒன்றே போதுமல்லவா. எனவே தான், பெருமானுக்கு தான் எடுத்துச் சென்ற ஒரு அம்பும் மிகையானது என்று மணிவாசக அடிகளார் கூறுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மூன்று கோட்டைகளை அழிப்பதற்கு ஒரேவொரு அம்பினுடன் பெருமான் சென்ற தன்மையே, அவரது அளவற்ற ஆற்றலை குறிப்பிடுகின்றது.

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற பெருமான, தன்னுடன் இரண்டு அம்புகளை எடுத்துச் செல்லாமல் ஒரே அம்புடன் சென்றார். அந்த ஒரு அம்பே முப்புரங்களை அழித்தது என்று உணர்வாயாக. உண்மையில் அந்த ஒரு அம்பும் பயன்படுத்தப்படாமல், பெருமான் சிரித்தே அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை புரிந்து கொண்டு, ஒரேவொரு அம்புடன் போருக்குச் சென்ற அவரது தன்னம்பிக்கையையும், அந்த அம்பையும் பயன்படுத்தாமல் மூன்று கோட்டைகளையும் அழித்த வீரச்செயலை கொண்டாடும் வண்ணம் உந்தி விளையாடுவாயாக

பாடல் 3:

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற

விளக்கம்:

தச்சு விடுதல்=தைத்து விடுதல் அழகு படுத்துதல்; வாயு புராணத்தில் உள்ள விவரங்களின் படி, திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்றபோது பெருமான் பயன்படுத்திய தேர், பொன்னால் செய்யப்பட்ட வலிமை வாய்ந்த தேர் என்பதை நாம் அறிகின்றோம். இத்தகைய அழகியதும் வலிமை வாய்ந்ததும் ஆகிய தேரினை பயன்படுத்தி பெருமான் வெற்றி கொள்ளப் போகின்றார் என்ற எண்ணம், இந்த தேரினை வடிவமைத்த விசுவகர்மாவுக்கு சற்று கர்வத்தை எற்படுத்தி இருக்க வேண்டும். மேலும் பல தேவர்கள், பெருமானுக்கு தாங்கள் உதவியாக இருப்பதாக தேரின் பல பகுதிகளாக பங்கேற்றனர். நான்கு வேதங்களும் தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளாகவும், பிரமன் அந்த குதிரைகளை செலுத்தும் சாரதியாகவும் பிரணவ மந்திரம் தேரோட்டியின் கைச் சாட்டையாகவும் பூமி தேர்த்தட்டாகவும் ஆகாயம் தேரின் கூரையாகவும் சூரிய சந்திரர்கள் தேரின் சக்கரமாகவும் மேரு மலை வில்லாகவும், வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும் அக்னி அம்பின் நுனியாகவும் திருமால் வில்லின் தண்டாகவும் காற்றுக்கடவுள் வில்லின் இறகுகளாகவும் பங்கேற்றன. இவ்வாறு பங்கேற்ற தேவர்களில் சிலருக்கு, தாம் பெருமானுக்கு துணையாக போருக்கு செல்கின்றோம் என்ற எண்ணம் வந்தது போலும். இதனை உணர்ந்த பெருமான், எவரது உதவியும் இல்லாமலே தான் திரிபுரத்து அரக்கர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதை உணர்த்த திருவுள்ளம் கொண்டார் போலும்.பெருமான் தனது திருவடியை தேர்த்தட்டின் மீது வைத்தவுடன், தேர்த்தட்டு அவரது திருவடியின் அழுத்தம் தாளமுடியாமல் முறிந்தது. இவ்வாறு தேர் முறியவே அந்த தேரினை பயன்படுத்தாமல் பெருமான் போரில் ஈடுபடுகின்றார். எனவே எவரது உதவியையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமின்றி போய்விடுகின்றது. இந்த செய்தியே இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற போது பெருமானுக்காக வடிவமைக்கப்பட்ட தேர் மிகுந்த உறுதியுடன் கட்டப்பட்ட தேராக இருந்தாலும்,அந்த தேர்த்தட்டு பெருமானின் திருவடி தந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் அந்த தேரின் அச்சு முறிந்தது. இவ்வாறு தேரின் அச்சு முறிந்து தேர் இல்லாது போயினும், எந்தவிதமான தடையுமின்றி பெருமான் பறக்கும் கோட்டைகள் மூன்றையும் அழித்தார். இவ்வாறு தேரின் அச்சு முறியும் வண்ணம் இருந்த அவரது திருவடிகளின வலிமை மற்றும் தேர் இல்லாமலே திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை பெருமான் எரித்தழித்த வீரச்செய்கையை பாடியவண்ணம் நாம் உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 4:

உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற

விளக்கம்:

இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்களும் திரிபுரத்து அரக்கர்களை அழித்த செய்தியை குறிப்பிட்டாலும், உட்பொருளாக் வேறொர் கருத்தையும் உணர்த்துவதையும் நாம் காணலாம். வில் வளைந்தது பூசல் விளைந்தது அழிந்தன முப்புரம் என்று சொல்லிய போதிலும், முதல் பாடலில் பெருமான் அழித்தார் என்று சொல்லவில்லை. இரண்டாவது பாடல் ஒன்றும் பெருமிகை என்று குறிப்பிட்டு, அம்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகின்றார். இந்த பாடலில் எய்ய வல்லான் என்று பெருமானை குறிப்பிடுகின்றாரே அன்றி அம்பினை எய்தவன் என்று சொல்லவில்லை. மூன்றாவது பாடலில் அச்சு முறிந்தது என்று உணர்த்தும் அடிகளார் போருக்கு தேரில் சென்றதாக சொல்லவில்லை. எனவே மூன்று புரங்கள் என்று இங்கே குறிப்பிடுவது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். இந்த மூன்று மலங்களை வெல்வதற்கு போர்ப்படைகள் தேவையில்லை.அறியாமை எனப்படும் ஞானத்தை வெல்வதற்கு படைகள் எதற்கு? ஞானம் தானே தேவைப்படும். என்வே தான் ஞான வெற்றி என்பதே இந்த பதிகத்தின் உட்கருத்து என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.

திரிபுரத்து அரக்கர்களும் ஏனை குடி மக்களும் சிவநெறியை கைவிட்டு புத்தர்களாக மாறிய போதிலும் இந்த கோட்டைகளில் வாழ்ந்து வந்த சுதன்மன்,சுசீலன் மற்றும் சுபுத்தி ஆகிய மூவரும் தொடர்ந்து சிவபெருமானையே வழிபட்டு வந்தனர். இத்தகைய பக்தி கொண்டு பெருமானை பூஜித்து வந்த மூவரும் மறுமையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு த்குதி படைத்தவர்களாக விளங்கினர். எனவே தான் அவர்கள் மூவரையும் உய்யவந்தார் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். இந்த் மூவரில் இருவர் கயிலையின் வாயிற்காப்பாளராகவும் மூன்றாமவர் குடமுழா வாத்தியம் வாசிப்பவராக உய்ந்தனர் என்று சுந்தரர் திருப்புன்கூர் பதிகத்தின் பாடலில் (7.55.8) கூறுகின்றார். வேறு பல திருமுறைப் பாடல்களும் இவ்வாறு மூவர்க்கு அருள் புரிந்த நிகழ்ச்சியை உணர்த்துகின்றன. இவ்வாறு தனது அடியார்களுக்கு அருள் புரியும் கருணைத் திறத்துடன் விளங்கும் பெருமானின் தலையாய கருணைச் செயலாகிய,தேவிக்குத் தனது உடலின் ஒரு பாகத்தைத் தந்த செய்லையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றையும் எரித்து, அதில் வாழ்ந்த வந்த அரக்கர்கள் அனைவரையும் அழித்த போதிலும், தனது அடியார்களாகத் திகழ்ந்த சுதன்மன், சுசீலன், சுபுத்தி ஆகிய மூவரையும், சிவநெறியில் தொடர்ந்து ஒழுகி வந்ததால் உய்வினை அடைவதற்கு தகுதி பெற்றவர்களாக் திகழ்ந்த மூவரையும், காவல் கொண்டு அவர்கள் அழியாமல் காத்தவன் பெருமான். அவன் என்றும் இளமையாக திகழ்பவளும் அழகிய மார்பங்களை உடையவளும் ஆகிய பார்வ்தி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவன் ஆவான். இவ்வாறு தனது அடியார்கள் மூவரும் அழியாத வண்ணம் காத்தது மற்றும் பார்வதி தேவிக்குத் தனது உடலின் ஒரு பகுதியை ஈந்தது ஆகிய கருணைச் செயல்களின் தன்மையை குறிப்பிட்டு உந்தீ விளையாடுவோமாக 

பாடல் 5:

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற

விளக்கம்:

அடுத்து வரும் பன்னிரண்டு பாடல்களில் தக்க யாகத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அடிகளார் குறிப்பிடுகின்றார். சாடிய=தாக்கிய; சரிந்திட=அழிய;சிவபெருமான் மீது தான் கொண்டிருந்த பகைமை காரணமாக பெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்ய வேண்டும் என்று முடிவு செய்த தக்கனிடம் அத்தகைய வேள்வி செய்வது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு மாறானது என்று சிறந்த ஏழு முனிவர்களும் எடுத்துச் சொல்லிய போதிலும், தக்கன் அந்த அறிவுரையினைச் செவியுறாமல், தனது முயற்சியைத் தொடர்ந்தான். அவனது பகை உணர்ச்சி, மற்றும் ஆணவம், அவனது கண்களை மறைத்து அஞ்ஞானத்தில் விழுவதற்கு காரணமாக விளங்கியது. பெருமானின் அம்சமாகிய வீரபத்திரரின் செயல்களால் தக்கனின் அஞ்ஞானம் மறைந்தமையால்,ஞானவெற்றி என்று சொல்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. தேவர்கள் ஓடியதாக இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார். வேதங்களையும் வேத நெறியையும் காக்க வேண்டியது அனைவரின் கடமை. தினமும் வேதம் ஓதியவாறு படைப்புத் தொழிலில் ஈடுபடும் பிரமனும், வேதங்களை காப்பதற்காகவே மீனாக அவதாரம் எடுத்த திருமாலும், அத்தகைய கடமையிலிருந்து தவறியதற்கு காரணம் தக்கனிடம் அவர்களுக்கு இருந்த ப்யமே காரணம். அவர்களுக்கு அந்தந்த பதவிகளை அளித்து அவர்களை பல வகையிலும் காப்பாற்றி வருபவர் சிவபெருமான் என்பதையும் மறந்து, நன்றியற்றவர்களாக தாம் இருந்த தன்மையை தேவர்கள் அனைவரும் வீரபத்திரர் தாக்கியபோது உணர்ந்தமையால், அவர்கள் திசைக்கு ஒருவராக சிதறியோடினர்.

பொழிப்புரை:

வீரபத்திரரால் தக்கன் தாக்கப்படவே, தாங்கள் செய்த தவறினை, வேதநெறிக்கு எதிராக செய்யத் துணிந்த வேள்விக்கு துணையாக நின்ற தவறினை,உணர்ந்த தேவர்கள் அச்சம் கொண்டு திசைக்கு ஒருவராக சிதறி ஓடியதால், தக்கனின் வேள்வி முற்றுப்பெறாமல் அழிந்தது. இவ்வாறு தேவர்கள் அச்சம் கொண்டு ஓடியதை குறிப்பிட்டு, இந்த வெற்றியை உடையவன் உருத்திரர்களின் தலைவனாகிய சிவபெருமான் என்று புகழ்ந்த வண்ணம் உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 6:

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற

விளக்கம்:

தக்கனது யாகத்தில் பங்கேற்ற பல தேவர்கள் தண்டனை பெற்றதை நாம் புராணங்களிலிருந்து உணர்கின்றோம். தக்கன் நிகழ்த்திய வேள்வியில் பங்கு பெற்று வேள்வியில் கொடுக்கப்படும் தங்களுக்கு உரிய அவிர்ப் பாகத்தை பெறுவதற்காக சென்ற தேவர்கள் வீரபத்திரரிடம் பெற்ற தண்டனை மிகவும் விரிவாக திருவுந்தியார் பதிகத்தில் மாணிக்க வாசகரால் கூறப்பட்டுள்ளது. திருமால் மற்றும் பிரமனும் அந்த யாகத்தில் பங்கு கொண்டாலும் அவர்கள் இருவரும் தண்டனை பெற்றதாக எந்த தேவாரப் பாடல்களிலும் கூறப்படவில்லை. தக்க யாகத்தில் அளிக்கப்பட தண்டனைகளை விரிவாக கூறும் திருவுந்தியார் பாடல்களிலும், திருமாலும் பிரமனும் பெற்ற தண்டனை சொல்லப் படவில்லை. அவிர்பாகம் பெற்ற பின்னரும் திருமால் சாவாது இருந்தான் என்று மணிவாசகர் கூறுகின்றார். மேலும் திருமாலை சதுர்முகன் தாதை என்று குறிப்பிட்டு, பிரமனும் சாகவில்லை என்பதை உணர்த்துகின்றார். ஆஆ என்பது வியப்பினை வெளிப்படுத்தும் சொற்குறிப்பு. பிரமனும் திருமாலும் தப்பியது எவ்வாறு என்பதற்கு விடை அப்பர் பிரானின் பதிகத்தில் நமக்கு கிடைக்கின்றது. தங்களது அறியாமையால் தாங்கள் செய்த தவற்றினை, தக்கன் நடத்திய யாகத்தில் பங்கு கொண்டதை மன்னிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி அகன்றதாக கீழ்க்கண்ட பாடலில் கூறப்பட்டுள்ளது. கமி=க்ஷமி என்ற வடசொல்லின் திரிபு. தவத்தில் மேம்பட்ட தக்கன் நடத்திய சிறப்பான வேள்வியில் கிடைக்கும் அவிர்பாகத்தை உண்தற்காக அந்த வேள்வியில் பங்கு கொண்ட வேள்வித் தலைவன், தேவர்களாகிய அக்னி, சந்திரன் ஆகியோர் பெற்ற தண்டனையைக் கண்ட பிரமனும் திருமாலும், நாங்கள் அறியாமையால் செய்த தவற்றினை மன்னித்து அருள வேண்டும் என்று வேண்டியபடியே வேள்விச் சாலையிலிருந்து அகன்று செல்லுமாறு, வெற்றி கண்ட, செந்தீயின் நிறத்தை ஒத்த மேனியை உடைய சிவபிரானின் திருப்பாதங்களைக்கண்டு வழிபடுவதே அனைத்து உயிர்களின் கடமையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

 உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில் அவி உண்ண வந்த இமையோர்

 பயமுறும் எச்சன் அங்கி மதியோன் உற்ற படி கண்டு நின்று பயமாய்

 அயனொடும் மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகலச்

 சயமுறு தன்மை கண்ட தழல் வண்ணன் எந்தை கழல் கண்டு கொள்கை கடனே

பொழிப்புரை:

தக்கனது யாகத்தில் அவிர்ப்பாகம் கொண்ட பின்னரும் திருமால் தண்டனை ஏதும் பெறாமல் உயிரோடு இருந்தது வியப்புக்கு உரிய செய்தியாகும்.இவ்வாறே திருமாலின் மகனாகிய பிரமனும் தண்டைனை ஏதும் பெறவில்லை. இதற்கு காரணம், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும், தங்களது தவறினை ஒப்புக்கொண்டு தங்களை மன்னித்துவிடுமாறு வீரபத்திரரிடம் வேண்டியது தான். இவ்வாறு திருமால் பிரமன் ஆகிய இருவரும் மன்னிப்பு கேட்க வைத்க பெருமானின் ஆற்றலையும் பெருமானின் இத்தகைய கருணை குணத்தினையும் புகழ்ந்து பாடியவாறு நாம் உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 7:

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற

விளக்கம்:

வெய்யவன்=வெம்மைத் தன்மை உடையவன்; அங்கி=அக்னி தேவன்; தக்கனது வேள்வியில் தேவர்கள் பலரும் பங்கேற்றதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் பொதுவாக நிலவுலகில் செய்யப்ப்டும் வேள்விகளில் தேவர்கள் நேரிடையாக பங்கேற்பதில்லை. வேள்வியில் வளர்க்கப் படும் தீயினில் தான், நாம் அந்தந்த தேவதைகளுக்கு உரிய அவிர்ப்பாகம் மற்றும் நைவேத்தியம் ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றோம். அக்னி தேவன் தான், அவற்றைப் பெற்றுக்கொண்டு அந்தந்த தேவதைகளிடம் சேர்ப்பதாக நம்பிக்கை. வேதநெறிக்கு முரணாக செய்யப்படும் வேள்விகளில் அக்னி தேவன் அவிர்ப்பாகம் பெறலாகாது என்பதை உணர்த்தும் முகமாக இந்த தண்டனை அக்னி தேவனுக்கு அளிக்கப்படுகின்றது

பொழிப்புரை:

வெம்மைத் தன்மை உடைய அக்னி தேவன், தான் பெற்ற அவிர்பாகத்தை உட்கொள்ளும் பொருட்டு நீட்டிய கையினை வீரபத்திரர் துண்டித்தார். அக்னி தேவனின் கையை துண்டித்த வீரச்செயலை குறிப்பிட்டு உந்தீ விளையடுவோமாக. இதனால் அக்னி அவிர்ப்பாகத்தைப் பெற முடியாமல் இருந்த தன்மையை கண்டு, அந்த வேள்வியில் பங்கேற்ற அனைவரும் கலங்கினர். இத்தகைய வீரச்செயலின் தன்மையை புகழ்ந்து நாம் உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 8:

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற

விளக்கம்:

பார்ப்பதி=பார்வதி தேவி; பணை முலை=பெருத்த மார்பகம்; தனது தந்தை செய்ய முயற்சி செய்த வேள்வியில் பங்கேற்க வேண்டும் என்று சிவபெருமானின் மனைவியாகிய தாட்சாயிணி விரும்புகின்றாள். சிவபெருமானுக்கோ தன்னை அழையாத இடத்திற்கு தனது மனைவி செல்வதில் விருப்பமில்லை. மேலும் அங்கு சென்றால் அவமானப்படலாம் என்றும் பெருமான் எச்சரிக்கை செய்கின்றார். ஆனால் தாட்சாயிணி வேள்வி நடக்கும் இடத்திற்கு செல்ல, ஆங்கே சிவபெருமானை இழிவாக தக்கன் பேசுவதைக் கேட்க, பிராட்டிக்கு கோபம் வருகின்றது. தொடர்ந்து அங்கே சிவபெருமான் அவமதிக்கப் படுவதை பொறுக்க முடியாமல் தந்தையிடம் வாதம் செய்தாள். ஆனால் தட்சன் தனது மகள் என்றும் பாராமல் பிராட்டியையும் தாழ்த்திப் பேசலானான்; மேலும் சிவபெருமானை, அனைவர் முன்னிலையிலும் பழித்தான். இதனால் மிகவும் வருத்தமடைந்த உமையம்மை, தட்சன் வளர்த்த உடலுடன் வாழ்வது தவறு என்று கருதி தனது உடலை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தாள். தனது தந்தையிடம், தான் இனிமேல் தட்சனது மகளாக அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் கூறினாள். தான் தக்கனுக்கு மகளுமல்ல, தக்கன் வளர்த்த உடலை வைத்துக் கொண்டு வாழவும் விரும்பவில்லை என்று சொல்லி, த்னது உயிரினை விட்டுவிடுகின்றாள். பின்னர் இந்த தாட்சாயிணி தான் பார்வதி தேவியாக, இமவானின் மகளாக வளர்ந்து பெருமானை பின்னர் திருமணம் செய்து கொள்கின்றாள். தாட்சாயணியே, தான், தக்கன் வளர்த்த மகள் அல்ல, தாட்சாயணி என்பது தனது பெயருமல்ல என்று சொல்லிய படியால், மணிவாசக அடிகளார், தாட்சாயணியை அந்த பெயரிட்டு குறிப்பிடாமல், பார்வதி தேவி என்று குறிப்பிடுகின்றார் போலும். இவ்வாறு பெருமான் தாட்சாயணியைப் பிரிந்த நிகழ்ச்சியை அப்பர் பிரானும் தனது தேவாரப் பாடலில் திருச்சேறை பதிகத்தின் பாடலில் (4.73.1), இவ்வாறு தேவி தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபிரானிடமிருந்து பிரிந்ததை, இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆனால் தாட்சாயணி என்று கூறாமல்,ஏன் இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். தாட்சாயணி தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர் தான் இமவானின் மகளாகத் தோன்றுகின்றாள்; மேலும் இமவானின் மகளாகிய பார்வதி தேவி. சிவபிரானை திருமணம் செய்து கொண்ட பின்னர், சிவபிரானை விட்டு பிரியவில்லை. தனது தந்தையாகிய தட்சனுக்கும் தனக்கும் தொடர்பு கொண்ட உடல் வேண்டாம் என்று உமையம்மை உடலை நீத்த பின்னர்,தாட்சாயணி என்று உமையம்மையை அழைப்பது தவறு அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், இமவான் பெற்ற பெண்பிள்ளை என்று இங்கே குறிப்பிடுகின்றார். பெருந்திரு என்பதை உமையம்மைக்கு அடைமொழியாகக் கொண்டு, திருமகள் போன்ற அழகினை உடைய தேவி அனைத்து பெண் தெய்வங்களிலும் உயர்ந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். பெருந்திரு என்ற சொலுக்கு சிறந்த செல்வமாகிய பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்த இமவான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. யோகத்தில் மூழ்கி இருந்த சிவபெருமானின் தவத்தைக் கலைத்தால் தான், சிவபெருமான் தனது தவத்தை விடுத்து பார்வதி தேவியை மணந்து, பின்னர் அவர்களுக்கு மகனாகத் தோன்றும் சிவபிரானின் அம்சத்தால் சூரபத்மனை அழிக்க முடியும் என்ற நோக்கத்தில், மன்மதன் மூலம் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க தேவர்கள் முயற்சி செய்தனர். தனது தவத்தைக் கலைத்த மன்மதனை விழித்தே அழித்த சிவபெருமான், மன்மதன் விரித்த வலைக்கு பிடிபடாத சிவபெருமான், ஏன் பார்வதி தேவியை திருமணம் புரிந்துகொண்டார் என்பதற்கு இந்த பதிகத்தில் காரணம் கூறப்படுகின்றது. பார்வதி தேவி கடினமான தவம் மேற்கொண்டு, சிவபெருமானை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தவே, சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் புரிந்தார் என்று விளக்கம் இங்கே அளிக்கப்படுகின்றது இதிலிருந்து சிவபெருமான், உமையம்மை மீது கொண்ட காதலால், காமத்தால், திருமணம் புரியவில்லை; உமையம்மை செய்த தவத்திற்கு இரங்கியே மணம் புரிந்தார் என்பது தெளிவாகின்றது. மணிவாசக அடிகளார் மற்றும அப்பர் பிரான் அருளிய இந்த இரண்டு பாடல்களும், எவ்வாறு மிகவும் நுண்ணிய செய்திகளையும் தங்களது பாடல்களில் அருளாளர்கள், எளிமையான முறையில் தெரிவிக்கின்றனர் என்பதை உணர்த்துகின்றன. தாட்சாயணி தன்னை விட்டு பிரிந்ததால் வருத்தம் அடைந்த, அத்தகைய நிலை என்றும் ஏற்படாது இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டார் என்பதை உணர்த்துவது போன்று பணைமுலை பாகன் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை நிந்தனை செய்யும் எவரையும் பார்ப்பதும் குற்றம் என்பமையால், அவனை பார்ப்பது எதற்காக என்று முதல் பெண்மணி உரைப்பதாக அடிகளார் கூறுகின்றார். குயிற்குஞ்சி தான் வளரும் வரையில் காகங்களுடன் கூடி இருந்து, காகத்தின் பாதுகாப்பில் வளர்ந்து, சிறகு முளைத்ததும் பறந்து போய் விடுவது போன்று, இந்திரனும் அவிர்ப்பாகாதை ஏற்கும் வரையில் தக்கனுடன் கலந்து களித்திருந்து, பின்னர் வீரபத்திரர் வந்தவுடன் தக்கனை விட்டுவிட்டு ஓடிய தன்மை மிகவும் நயமாக உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

பின்னொரு காலத்தில் பார்வதி தேவியாக வளர்ந்த பிராட்டியுடன், தாட்சாயணி தேவியுடன் பகை பாராட்டி, தான் பெற்ற மகள் என்பதையும் கருதாது,இழிவாகப் பேசிய தக்கனை பார்ப்பதே தகாத செயல் என்று உந்தீ விளையாடுவோமாக. பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாதியில் ஏற்றுக்கொண்ட பெருமானின் கருணைச் செயலைப் புகழ்ந்தவாறு உந்தீ ஆடுவோமாக.

பாடல் 9:

புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற

விளக்கம்:

தக்க யாகத்தில் பங்கேற்ற மற்ற தேவர்கள் தண்டனை அடைந்த போது, இந்திரன் எவ்வாறு தண்டனையிலிருந்து தப்பினான் என்பது இந்த பாடலில் விளக்கப்படுகின்றாது. புரந்தரன்=இந்திரன்: பெருமானுக்கு அஞ்சி ஒளிந்து கொண்ட இந்திரன் வானவர்கள் தலைவன் அல்ல; பெருமான் தான் வானவர்களின் உண்மையான தலைவன் என்று உணர்த்தும் பொருட்டு, பெருமானை வானவர் கோன் என்று அடிகளார் அழைக்கின்றார்.

பொழிப்புரை:

வீரபத்திரர் மற்றைய தேவர்களுக்கு அளித்த தண்டனையைக் கண்டு அச்சம் கொண்ட இந்திரன், ஒரு அழகிய குயிலின் வடிவம் கொண்டு ஒரு மரத்தினில் ஒளிந்து கொண்டதால், தண்டனை ஏதுமின்றி தப்பினான். இவ்வாறு இந்திரனும் அச்சம் கொண்டு ஒளிந்து கொள்ளும் வண்ணம் வீரச்செயல்கள் புரிந்த சிவபெருமானே, வானவர்களின் உண்மையான தலைவன் என்று புகழ்ந்தவாறு உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 10:

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற

விளக்கம்:

வியாத்திரன்=யாத்திரிகன் என்ற சொல்லின் எதிர்மறை. ஏனைய யாத்திரிகர்களிலிருந்து மாறுபட்டவன்; அனைவரும் வேதநெறியில் சொல்லப்பட்டுள்ள முறையில் வேள்வி செய்த போது, அவர்களினின்று மாறுபட்டு வேதநெறிக்கு விரோதமாக, சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்ய முயற்சி செய்த தக்கன்; வெஞ்சினம்=கொடிய சினம்; இந்த பாடலில் பெருமான் மீது மிகுந்த சினம் உடையவனாக தக்கன் விளங்கினான் என்று அடிகளார் கூறுகின்றார்.கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் குறிப்பிடும் சில செய்திகளை நாம் இங்கே காண்போம். தாட்சணியை திருமணம் செய்து கொள்ள் முடிவு செய்த பெருமான், எவரும் அறியாத வண்ணம், பிராட்டியுடன் மறைந்து விடுகின்றார். இந்த செயல் தக்கனுக்கு பெருத்த அவமானம் விளைவிக்கவே, அவன் பெருமான் பால் மிகுந்த கோபம் கொண்டான். எனினும் பிரமனின் ஆலோசனையின் பேரில், கயிலாயமலை சென்று தனது பெண்ணையும் மருமகனையும் பார்த்து விசாரித்து, தனது கோபத்தைத் தணித்துக் கொள்ள முயற்சி செய்கின்றான். கயிலாயத்தின் வாயிலில் தக்கனை தடுத்து நிறுத்திய நந்தி, தான் உள்ளே சென்ற பெருமானின் அனுமதி பெற்று வருவதாக கூறுகின்றார். மேலும் முன்னர் நீர் எமது பெருமானை இகழ்ந்து பேசியமையால், பெருமானின் அனுமதி பெற்ற பின்னரே உங்களை உள்ளே அனுமதிப்போம் என்று சொன்னதைக் கேட்ட தக்கனுக்கு கோபம் மேலும் அதிகரித்தது. அப்போது தக்கன்,திருமாலாலும் பிரமனாலும் வணங்கப்படும் நான், சிவபெருமானிடம் இறைஞ்ச வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று பதிலளித்து விட்டு, கயிலையை விட்டு அகன்றுவிட்டான். சில நாட்கள் கழித்து பிரமன் ஒரு யாகம் செய்யவேண்டும் என்று விரும்பி, சிவபெருமானைச் சென்று அணுகி அந்த யாகத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கின்றார். சிவபெருமான் தனக்கு பதிலாக நந்தியம்பெருமானை அனுப்புகின்றார். நந்தியம் பெருமான் உள்ளே நுழைந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பு தக்கனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த வரவேற்பினை கண்ட தக்கன், சிவபெருமானுக்கு முதலிடம் கொடுக்கப் படும் என்பதை உணர்கின்றான். அதனை பொறுக்காத தக்கன், ஊரெங்கும் திரிந்து பலியேற்பவன் என்றும் சுடுகாட்டில் உறைந்த வண்ணம் சாம்பல் பூசிக் கொண்டு திரிபவன் என்றும் இகழ்ந்து பேசி, அத்தகையவருக்கு முதலிடம் அளிப்பது தவறு என்றும் பேசினான். சிவபெருமானுக்கு பதிலாக இனிமேல் திருமாலுக்கு தான் அந்த இடத்தை அளிக்கவேண்டும் என்று கூறினான். இதனைக் கேட்ட நந்தியார்,. சிவபெருமானைத் தவிர்த்து வேறொருவருக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று கூறுவோரின் தலை துண்டிக்கப்படும் என்று முழங்கினார். மேலும் தான் செய்து வரும் தவறுகளுக்கு பெருமானிடம் இறைஞ்சாமல், தொடர்ந்து சிவபெருமானை இகழ்ந்து பேசும் தக்கனின் அறுக்கப்பட்டு வேறோர் தலை பொருத்தப்படும் என்று சாபம் இடுகின்றார். இந்த சாபம் பலித்ததை பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு தக்கனுக்கும் நந்தியம் பெருமானுக்கும் இடையே நடந்த விவாதங்களை கவனித்த பிரமன், வேள்வி ந்டத்தும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார். இதன் விளைவாக எங்கும் சில காலம், எங்கும் வேள்வியே நடக்காமல் இருந்தது. இந்த பின்னணியில் தக்கன், சிவபெருமானை புறக்கணித்து தானே ஒரு வேள்வி நடத்தி, உலகினுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தொடங்கப் பட்டது தான் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படும் தக்கன் வேள்வி. இதுதான் கடுமையான சினத்துடன் தக்கன் இந்த வேள்வியில் ஈடுபட்டதன் காரணம். தக்கனது வேள்வி எந்த இடையூறும் இன்றி முடிந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்பதால் தான் சிவபெருமான் இந்த வேள்வி முற்றுப்பெறாமல் இருக்கவேண்டும் என்று திருவுள்ளம் கொள்கின்றார். தக்கனது தலையை பெருமான் அறுத்த செய்தியை குறிப்பிடும் அடிகளாருக்கு, தனது அடியார்களை பிணைத்துள்ள பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்கும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பது நினைவுக்கு வந்தது போலும்.

பொழிப்புரை:

கடுமையான சினத்துடன், சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன், ஏனையோர் வேள்வி செய்த முறையிலிருந்து மாறுபட்டும் வேதநெறிக்கு எதிராகவும் வேள்வி செய்வதற்கு முயற்சி செய்த தக்கனது தலை அறுக்கப்பட்டது என்று உந்தீ விளையாடுவோமாக. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானைப் புகழ்ந்து பாடி நாம், நமது பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக்கொள்வோம் என்று உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 11:

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற

விளக்கம்:

ஒரு உயிரினை படைக்கும் போதே, அந்த உயிரின் தலையெழுத்தையும் எழுதுபவனாக பிரமன் கருதப்படுவதால், பிரமனை விதி என்றும் குறிப்பிடுவார்கள்.பிரமனின் மகனை சிறுவிதி என்று கூறுவார்கள். சிறுவிதிக்கு பதிலாக விதி என்றே தக்கனை அடிகளார் குறிப்பிடுகின்றார். சென்ற பாடலில் தக்கனது தலை அறுக்கப்படது என்று குறிப்பிட்ட அடிகளார், தலை அறுபட்ட பின்னரும் தக்கன் எவ்வாறு பிழைத்தார் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். வேதங்களில் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு மாறாக செய்யப்பட்ட வேள்வி என்பதால், வேள்வி முற்றுப்பெறாமல் அழிக்கப்பட வேண்டும் என்பதே பெருமானின் உள்ளக்கருத்து என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் தக்கனது வேள்வியில் பங்கேற்றவர் எவரும் தண்டனை பெற்ற போதிலும் எவரும் தங்களது உயிரினை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொழிப்புரை:

சிறுவிதி என்று அழைக்கப்படும் தக்கன் தனது தலையை இழந்த பின்னர், ஆட்டின் தலையை வைத்துக் கூட்டி தக்கனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தார் என்று குறிப்பிட்டு, பெருமானின் கருணையைப் புகழ்ந்து நாம் உந்தீ விளையாடுவோமாக. நமது மார்பகங்கள் குலுங்கும் வண்ணம் துள்ளிக் குதித்து உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 12:

உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற

விளக்கம்:

பகன் என்பது சூரியனின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று; பன்னிரு சூரியர்கள் (துவாதச ஆதித்யர்கள்) என்று கூறுவார்கள். மித்திரன், இரவி, சூரியன், பானு,பகன், பூஷணன், ஹிரண்யன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாச்கரன் என்பவர்களே இந்த பன்னிரண்டு பெயர்கள்; இந்திரன் தப்பித்து ஓடியதால் தண்டனையிலிருந்து விடுபட்டதை ஒன்பதாவது பாடலில் குறிப்பிட்ட அடிகளார், அவ்வாறு தப்பிக்க முயன்ற சூரியனின் கண் பறித்த செய்தியை அடிகளார் இங்கே உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

தனக்கு அளிக்கப்பட்ட அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்டு உண்பதற்கு தலைப்பட்ட பகன் எனப்படும் சூரியன் ஓடி ஒளிந்து கொள்ள முயற்சி செய்தபோது,அவனது கண்ணைப் பறித்த வீரச் செயலை குறிப்பிட்டு நாம் உந்தீ விளையாடுவோமாக. நாம் மீண்டும் கருவினில் புகுந்து பிறப்பு எடுக்காமல் இருப்பதற்கு பெருமானைப் புகழ்ந்து உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 13:

நாமகள்நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன்னெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற

விளக்கம்:

தொல்லை வினை=எண்ணற்ற பிறவிகளாக தொன்று தொட்டு உயிர்களைப் பற்றி வரும் வினைகள்; பொதுவாக வினைகளை நாம் நுகர்ந்து, அதாவது அனுபவித்துத் தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் பெருமானின் அடியார்கள், பெருமானின் அருளால் தாங்கள் பெற்ற ஞானத்தின் விளைவாக,தற்போதம் அற்றவர்களாக விளங்கி வாழ்க்கையில் தாங்கள் எதிர் கொள்ளும் இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து அதனால் எந்த விதத்திலும் சலனம் அடையாமல் இருப்பதால், மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாத நிலையினை அவர் அடைகின்றனர்; அவர்களது உயிர் அத்தகைய பக்குவத்தைப் பெற்று விடுகின்றாது. இனியும் இவர்களை வினைகளின் செயல்களுக்கு உட்படுத்தவதால் எந்த மாற்றமும் அடைய மாட்டார்கள் என்பதை உணரும் பெருமான், அவர்களது வினைகளை, இனி எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கான வினைகளை, ஒரு சேரக் கழித்து விடுகின்றான். இந்த தன்மையே இங்கே சொல்லப் படுகின்றது. முகன்=முகம்; சோமன்=சந்திரன்; பிரமன் என்று இங்கே வேள்வித் தலைவனை குறிப்பிடுகின்றார். வேள்வி செய்து வைப்பவர் தகுந்த ஒருவரை வேள்வித் தலைவனாக நியமிப்பார். இவரை பிரமன் என்று கூறுவார்கள். இவரது கடமை, வேள்வி தகுந்த முறையில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணித்து, தவறு ஏற்பட்டால் திருத்த வேண்டியது. தருமபுத்திரர் நடத்திய இராஜசூய யாகத்தின் வேள்வித் தலைவனாக, கண்ணன் நியமிக்கப் பட்டதை நாம் அறிவோம். தற்காலத்தில் நடைபெறும் வேள்வி மற்றும் ஹோமங்களிலும், நன்கு கற்றுத் தேர்ந்தவரை பிரமனாக நியமிக்கின்றனர். பிரமனும் நியமிக்கப்படும் எவரும், அந்த் வேள்வி முடியும் வரையில் தனது இடத்தினை விட்டு நகராமல் கவனிக்கவேண்டும். அவ்வாறு எவரையும் வேள்வித் தலைவனாக, ஒரு கூர்ச்சத்தை பிரமனாக பாவித்து வெள்வியை தற்காலத்தில் நடத்துகின்றனர். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நியதிக்கு மாறாக வேள்வி நடத்தப்படுவதை கண்டித்து நிறுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்காக, அவரை சிவபெருமான் தண்டிக்கின்றார். வேள்வியை சரியாக நடத்த வேண்டிய கடமையிலிருந்து தவறிய வேள்வித் தலைவனும், தவறான முறையில் வேள்வி நடத்த முயற்சி செய்த தக்கனும் ஒரே தனமையில் தண்டனை அடைந்தனர் என்பதை நாம் உணரலாம். நாமகள்=சரசுவதி. பிரமனின் தலை பறிக்கப்பட்ட வீரச்செயல் இதே பதிகத்தின் பதினெட்டாவது பாடலில் குறிப்பிடப்படுவதால் இந்த பாடலில் நான்மறையோன் என்று உணர்த்துவது வேள்வித்தலைவனைத் தான் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

பொழிப்புரை:

நாமகள் என்று அழைக்கபப்டும் சரசுவதி தனது மூக்கினையும், பிரமனாக நியமிக்கப்பட்டு வேள்வித் தலைவனாக தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறியவர் தனது தலையினை இழக்கும் வண்ணம் தண்டனை அளித்த பெருமான், சந்திரனைத் தேய்த்து அவனது முகத்தினை சிதைத்தார் என்று அவரது வீரத்தை குறிப்பிட்டு உந்தீ விளையாடுவோமாக. இவ்வாறு அவனைப் புகழ்ந்து பாடி நம்முடன் இணைந்துள்ள பழ வினைகளை முற்றிலும் அழித்துக் கொள்வோம் என்று மகிழ்ந்து உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 14:

நான்மறை யோனு மகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற

விளக்கம்:

இயமான் என்பது இயமானன் என்பதன் இடைக்குறை; இயமானன்=எஜமான், உரிமையாளன், இங்கே தக்கன்; பட=தண்டனை அடைந்து வருந்த;புரந்தரன்=இந்திரன்; இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் புரந்தரனார் ஒரு பூங்குயிலாக மாறி மரத்தினில் ஒளிந்து கொண்டார் என்று குறிப்பிட்ட அடிகளார், ஏன் அவ்வாறு இந்திரன் செய்தான் என்பதன் காரணத்தை இந்த பாடலில் உணர்த்துகின்றார். வீரபத்திரரால் பிரமனின் தலை அழுத்தப்பட்டது என்பதாக சென்ற பாடலுக்கு சிலர் விளக்கம் அளிக்கின்றனர். திருமாலும் பிரமனும், தங்களது குற்றதை பொறுத்தருள வேண்டும் என்று இறைஞ்சிய காரணத்தால், இருவரும் தண்டனையிலிருந்து தப்பினர் என்று விளக்கம் அளிக்கும் அப்பர் பிரானின் பாடலை நாம் இந்த பதிகத்தின் ஆறாவது பாடலின் விளக்கத்தில் சிந்தித்தோம். எனவே இந்த வேள்வியில் பங்கேற்றதால் பிரமன் எந்த தண்டனையும் பெறவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே நான்மறையோன் என்று வேள்வித்தலைவனை குறிப்பிடுவதாக பொருள் கொள்வது பொருத்தமே. பிரமனின் தலை பறிக்கப்பட்ட வீரச்செயல் இதே பதிகத்தின் பதினெட்டாவது பாடலில் குறிப்பிடப்படுவதால் இந்த பாடலில் நான்மறையோன் என்று உணர்த்துவது வேள்வித்தலைவனைத் தான் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

பொழிப்புரை:

வேள்வித்தலைவனும், வேள்வி நடைபெற்ற இல்லத்தின் தலைவனாகிய தக்கனும் அடைந்த தண்டனையைக் கண்ட இந்திரன், அச்சம் கொண்டு ஓடிய தன்மையைக் கண்டு, பெருமானின் வீரச் செயலைப் புகழ்ந்து உந்தீ விளையாடுவோமாக. இவ்வாறு இந்திரன் ப்யந்து ஓடியது, தக்கன் முயற்சி செய்த வேள்வியில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 15:

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற

விளக்கம்:

பகன் எனப்படும் சூரியனின் பற்கள் தகர்க்கப்பட்டன் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சூரியன் தன் பற்களை இழந்ததால் தான், மிருதுவான வடை செய்து பொங்கல் அன்று சூரியனுக்கு நிவேதன்மாக படைக்கின்றனர் என்று கூறுவார்கள்.

பொழிப்புரை:

பகன் என்று அழைக்கப்படும் சூரியனின் பற்களைத் தகர்த்து அவனது தொண்டையை அடைத்து, வேள்வியில் அளிக்கப்படும் அவிர்பாகத்தை ஏற்றுக்கொள்ளாதவாறு தடுத்த வீரச்செயலைப் புகழ்ந்து உந்தீ விளையாடுவோமாக. இந்த நிகழ்ச்சியால் வேள்வியில் பஙேற்ற அனைவரும் மனம் கலங்கி மயங்கினர் என்று உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 16:

தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற

விளக்கம்:

தக்கன் தனது தலையினை இழந்த பின்னர், தக்கன் உட்பட எவருக்கும் அந்த வேள்வியினை தொடர்ந்து நடத்த, தைரியம் இல்லாத காரணத்தால், வேள்வி முற்றுப்பெறாமல் அழிந்தது என்பதை அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு வேதநெறிக்கு முரணாக நடத்தும் முயற்சி அழிந்தமையால்,அறியாமையாலும் அகந்தையாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டமையால் ஞானம் வெற்றி அடைந்தது என்பதை நாம் உணரலாம். எனவே ஞான வெற்றி என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

பொழிப்புரை:

தனது மக்களால் சூழப்பட்டு இருப்பினும், தக்கன் தனது தலை இழந்ததை எவராலும் தடுக்க முடியாத வண்ணம் நிகழ்ந்த பெருமானின் வீரச்செயலை குறிப்பிட்டு உந்தீ விளாயாடுவோமாக. தக்கன் தனது தலையினை இழந்த பின்னர், வேள்வி முற்றுப்பெறாமல் அழிந்தது என்று மகிழ்ந்து உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 17:

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற

விளக்கம்:

பாலகன்=உபமன்யு முனிவர்; வசிட்ட முனிவர் தனது தங்கையை புலிக்கால் முனிவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது முதல் பிரசவத்திற்காக பிறந்தகம் சென்ற புலிக்கால் முனிவரின் மனைவியின் மகனை உபமன்யு என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தையக இருந்த போது காமதேனு பசுவின் பாலைக் குடித்து வளர்ந்த அந்த குழந்தைக்கு, தில்லைச் சிதம்பரம் திரும்பிய பின்னர், அத்தகைய சுவையான பால் கிடைக்காமல், பால் உட்கொண்ணாது குழந்தை பசியால் வாடியது. தனது குழந்தை வாடியதைக் கண்டு வருந்திய புலிக்கால் முனிவ்ர் இறைவனை வேண்ட, இறைவன் பாற்கடலை வரவழைத்து அந்த குழந்தையின் பசியை போக்கினார். பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமான் திருமால் என்பதை நாம் அனைவரும் அறிவோம். புலிக்கால் முனிவர் திருமாலை வேண்டியிருந்தாலும், திருமாலும் பாற்கடல் தில்லை நகரத்திற்கு வருவதற்கு அருள் புரிந்திருப்பார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் பெருமானின் மெய்யடியார்கள் பெருமானைத் தவிர்த்து வேறெவரிடமும் எதனையும் வேண்டிப் பெறுகின்ற விருப்பம் அற்றவர்கள். எனவே தான் புலிக்கால் முனிவர் சிவபெருமானை வேண்டுகின்றார். பெருமானும் தனது அடியாரின் தன்மையை புரிந்து கொண்டவராக பாற்கடலை வரவழைத்து அருள் புரிகின்றார். இந்த பாடலில் பெருமானை குமரன் தாதை என்று குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது. ஒரு தந்தையின் உள்ளம் தானே, மற்றொரு தந்தையின் மனதினை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மேலும் குமரனுக்கு மட்டுமா பெருமான் தாதை; அண்ட சராசரத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் தந்தை; எனவே ஒரு தந்தையின் தவிப்பினை அவனை விடவும் எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர் வேறெவரும் இருக்க முடியாது அல்லவா.

பொழிப்புரை:

சிறுவன் உபமன்யு தரமான பால் வேண்டி அழுத போது, அவனது பசியைத் தீர்க்கும் பொருட்டு பாற்கடலையே தில்லை தலத்திற்கு வரவழைத்த பெருமானின் பெருமானின் கருணையை, அழகிய சடையினை உடைய பெருமானின் கருணையை குறிப்பிட்டு உந்தீ விளையாடுவோமாக; தமிழ்க்கடவுளாகிய குமரனின் தந்தையாகிய பெருமானின் கருணைத் திறத்தினை கொண்டாடும் விதமாக உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 18:

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற

விளக்கம்:

நல்ல மலர்=தாமரை மலர்; ஒல்லை=விரைவாக; உகிர்=கை நகம்; திருமாலும் பிரமனும் தங்களில் யார் பெரியவர் என்று ஒருவருக்கொருவர் தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்த போது, பெருமான் சோதி வடிவமாக தோன்றுகின்றார். சோதியின் அடியைத் தேடிச் சென்ற திருமால், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பெருமானை போற்றுகின்றார். பிரமனோ, பொய் பேசிய தாழம்பூவினை சாட்சியாக வைத்துக்கொண்டு தான் முடியினைக் கண்டதாக சாதித்ததுமன்றி, சிவபெருமானை இகழ்ந்தும் பேசினார். அவ்வாறு இகழ்ந்து பேசியமைக்காக பைரவர் அவரது தலையை கிள்ளினார் என்று கந்த புராணம் குறிப்பிடுகின்றது (அடிமுடி தேடிய வரலாறு, ததீசி உத்தரப்படலம்). இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஐந்து தலைகள் உடையவராக விளங்கிய பிரமன், ஒரு தலையை இழந்ததால், நான்முகன் என்று அழைக்கப்படலானார்.

பொழிப்புரை:

மலர்களில் சிறந்த மலராக கருதப்படும் தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள நான்முகனாரின் தலை மிகவும் விரைவாக அறுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு உந்தீ விளையாடுவோமாக. இவ்வாறு பிரமனின் தலையை பறிப்பதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் தனது நகத்தையே பயன்படுத்திய பெருமானின் ஆற்றலை புகழ்ந்து உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 19:

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற

விளக்கம்:

கயிலாய மலையினால் தனது தேரின் பயணம் தடைப்பட்டதை அறிந்த அரக்கன் இராவணன், வேறோர் பாதையில் தனது தேரினை செலுத்தாமல்,தேரிலிருந்து கீழே இறங்கி, கயிலாய மலையினைப் பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை, தான் நினைத்த வழியில், தொடர நினைத்த அரக்கனின் செயல் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

தனது தேர் சென்ற வழியில் குறுக்கே நின்றது என்று கருதி, தேரிலிருந்து கீழே இறங்கி, மிகுந்த ஆவேசத்துடன், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் ஈரைந்து தலைகளும் நொறுங்கி வருந்தின என்று மகிழ்ந்து உந்தீ விளையாடுவோமாக. மேலும் அவனது இருபது கரங்களும் அறுந்து விழும் நிலைக்கு அவனைத் தள்ளிய பெருமானின் கால் விரலின் வலிமையை புகழ்ந்து உந்தீ விளையாடுவோமாக.

பாடல் 20:

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற

விளக்கம்:

ஏகாசம்=மேலாடை; இருடி=ரிஷி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். சூரிய மண்டலத்திற்கு அருகே இருக்கும் வாலகீய முனிவர்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.

பொழிப்புரை:

வெறும் மேலாடை தவிர்த்து வேறெந்த ஆடையும் இல்லாத நிலையில் சூரிய மண்டலத்திற்கு மிகவும் அருகில் இருந்த வாலகீய முனிவர்கள்,துன்பமடையாமல் காக்கும் வண்ணம் ஆகாயத்தில் இறைவன் இயங்குகின்றான் என்று உந்தீ விளையாடுவோமாக. விண்ணைத் தாண்டி எவரேனும் இருந்தாலும் அவர்களுக்கும் காவலாக இருப்பவன் பெருமான் என்று அவனது ஆற்றலை வியந்து உந்தீ விளையாடுவோமாக.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்