பாபநாசம் நமச்சிவாய கவிராயர். எச்சில். சேலை.
M. No.;393 திருநெல்வேலி பாபநாசம் அம்பாளின் சேலையில் எச்சில்…!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு.
நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம்.
ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர், வெற்றிலை தரித்து போட்டுக்கொண்டு வாய்விட்டுப் பாடி வந்தார். மெய்ம்மறந்து பாடியபோது அவருமறியாமல் தெறித்த எச்சில் துளிகள் தேவியின் மேல்பட்டன. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள்.
மறுநாள் காலையில், கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார். அவ்வமயம் இறைவழிபாட்டுக்குப் பாபநாசம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் என அரசன் யோசித்துக் கொண்டு தூங்குகையில், அவன் கனவில் அசரீரி"விஜயரங்க சொக்கநாதா!! உலகம்மை யான்!! என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவனறியாது அவன்பின் சென்றவள் நானே!! எனது கவனக்குறைவாலே அவன் துப்பிய எச்சில் என் மீது பட்டது!! அவனை விட சிறந்த பக்தன் கிடையாது!! ஆதலின் அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாயாக!!!" என்று உலகம்மை எடுத்துரைத்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்தான் அரசன். "ஆஹா!! இவரை விட ச்ரேஷ்டமான தேவீ பக்தன் உண்டா??!?" என்றெண்ணி அம்பிகையின் உத்தரவின் படி கௌரவிக்க எண்ணினான்.
நமச்சிவாயரை கோவிலுக்கழைத்து "தாங்கள் அம்பிகை தாசர் என்பது ஸத்யமானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும்!! ம்!! ஆகட்டும்" என்றான் அரசன்.
"உலகம்மை அந்தாதி" எனும் அற்புதமான நூலை இயற்றினார். "அபிராமி அந்தாதி"யைப் போல் அதியற்புதமான நூலே இது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் அறுந்து விழுந்தன ஒவ்வொன்றாய். ஆஹா!! என்னே!! உலகம்மையின் கருணை!!!
"விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே"
எனும் பாடலை பாடி முடித்த சமயம் "படபட" வென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு தேவியின் கையிலிருந்து நமச்சிவாயர் கரத்திற்கு தாவி வந்தது. என்ன!! ஆச்சர்யம்!! அரசர் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாயர் பாதத்தில் விழுந்தனர்.
இவ்வாரு தன் பக்தனின் எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மையின் கருணை தான் என்னே.!
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
Comments
Post a Comment