Avvai Shanmugam Pillai Manonmaneeyam Sundaram Pillai Boys Drama Company Kannusamy Pillai related news

இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா?

சினிமா உலகம் தோன்றுவதற்கு முன் நாடகக் கலையே பிரதானமாக இருந்த காலகட்டம் அது. இன்று இருப்பது போல் ஷூட்டிங் நடத்தி, எடிட் செய்து வெளியிடும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டம். ஆன் தி ஸ்பாட்டிலேயே மேடையில் தோன்றி வசனங்களை மறக்காமல் சிங்கிள் டேக்கிலேயே பாடி நடிக்க வேண்டும். பக்கவாத்தியம் தனி. இவ்வாறு நாடகக் கலைகளில் கைதேர்ந்தவர்கள்தான் பின்னாளில் தமிழ் சினிமாவினை ஆண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி., உள்ளிட்ட நடிகர்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர்தான் டி.கே. சண்முகம்.

டி.கே. சண்முகம் என்றால் பலருக்கும் தெரியாது. அவ்வை சண்முகம் என்றால் இந்தத் தலைமுறைக்குத் தெரியும். ஏனெனில் கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் இவரின் பெயரிலிலேயே எடுக்கப்பட்டது. மேலும் சென்னையின் பிரதான சாலை ஒன்றும் இவர் பெயரிலியே அமைந்துள்ளது.

அப்படி என்ன செய்தார் நாடகத் துறைக்கு என்கிறீர்களா? தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்;  நாடக உலகிலும், திரை உலகிலும் பிரபல நட்சத்திரங்களின் குருவாகத் திகழ்ந்தவர்; "அண்ணாச்சி" என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர்.

1912 ஏப்ரல் 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் பிறந்த டி.கே. சண்முகம் "மனோன்மணியம்" தந்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மருமகன் ஆவார். இவரின் தந்தை கண்ணுசாமிப்பிள்ளை சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த பாய்ஸ் கம்பெனியில், சண்முகம் உள்ளிட்ட தனது 4 மகன்களையும் சேர்த்து விட்டார். பின்னர் சதாவதானம் தெ. பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரிடமும் சண்முகம் பயிற்சி பெற்றார்.

இவரது நான்கு சகோதரர்களும், "பால சண்முகானந்த சபா" என்ற சொந்த நாடகக் குழுவைத் தொடங்கினர். சமுதாய சீர்திருத்தங்களையும், சரித்திரங்களையும் இக்குழுவினர் நடத்தினர். "குமாஸ்தாவின் பெண்", "அந்தமான் கைதி", "உயிரோவியம்", "முள்ளில் ரோஜா", "மனிதன்", "சிவலீலா" போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

1943-ல் "அவ்வையார்" நாடகத்தில் அவ்வையார் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 31 வயதே ஆன சண்முகம், பெண் வேடத்தில் அதுவும் வயது முதிர்ந்த பாட்டியாக, தனது தோற்றத்தையும், பேச்சையும் மாற்றிக் கொண்டு, அவ்வையாராகவே வாழ்ந்துக் காட்டினார்.  இதன் காரணமாக அவர் "அவ்வை சண்முகம்" என்று அழைக்கப்பட்டார்.

நாடகங்களை நடத்திக்கொண்டே சினிமா உலகம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்ததார் அவ்வை சண்முகம். "மேனகா", "பெண் மனம்", "பில்கணன்" முதலிய படங்களில் நடித்த சண்முகம், பின்னர் அறிஞர் அண்ணா கதை – வசனம் எழுதி ஏவி.எம். தயாரித்த "ஓர் இரவு" படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்கள் நடித்த போதிலும் சிவாஜிகணேசன் நடித்த "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் சுப்பிரமணிய சிவாவாக சண்முகம் உணர்ச்சிகரமாக நடித்துப் பெயர் பெற்றார். "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் டி.கே.பகவதி ராவணனாக பிரமாதமாக நடித்தார்.

குழந்தைகளுக்காக நாடகம் நடத்த விரும்பிய சண்முகம், கவிஞர் திருச்சி பாரதனைக் கொண்டு, "அப்பாவின் ஆசை", "பலாப்பழம்" ஆகிய நாடகங்களை எழுதச்செய்து அரங்கேற்றினார். இரண்டு நாடகங்களிலும், அப்போது 10 வயது சிறுவனாக இருந்த கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. பேசும்போது இவர் அடிக்கடி 'எங்கள் சண்முகம் அண்ணாச்சி' என்று டி.கே.சண்முகம் அவர்களை நினைவுபடுத்துவார்.

டி.கே.சண்முகத்தின் நாடகக் குழுவில் நடித்த என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, ஆர்.எம்.வீரப்பன், "பிரண்ட்" ராமசாமி, எம். ஆர்.சாமிநாதன், டி.கே.ராமச்சந்திரன், எம்.என்.ராஜம், எம்.எஸ். திரவுபதி, டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோர் பின்னர் திரை உலகில் நுழைந்து மிகவும் புகழ் பெற்றனர். தமிழ் நாடகத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு காரணமாக தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்