உந்தீ பற திருவாசகம் உந்தீபற
14. திருவாசகம்-திருவுந்தியார்
பண் :
பாடல் எண் : 1
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.
பொழிப்புரை :
இறைவனது வில் வளைந்தது; வளைதலும் போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`வில்` என்பது. ஈற்றில் உகரம் பெற்று வந்தது. `வில் சிவ பெருமானுடையது` என்பதும், `பூசல் (போர்) அசுரருடையது என்பதும் ஆற்றலான் விளங்கின.
உளைந்தன - துயருற்றன. ``முப்புரம்`` என்றது இரட்டுற மொழிதலாய் முன்னர் அதன்கண் வாழ்வார் மேல் நின்று, உளைதல் வினையோடும், பின்னர் முப்புரத்தின் மேலதேயாய் வேதல் வினையோடும் இயைந்தது.
ஒருங்கு - ஒருசேர. ``உடன்`` என்றது. `நொடியில்` என விரைவு குறித்தவாறு. ``வெந்த வாறு`` என்றதன்பின், `பாடி` என்பது வருவிக்க. இதனுள் இனிவரும் திருப்பாட்டுக்களிலும் வேண்டு மிடங்களில் இவ்வாறே இதனை வருவித்து முடிக்க.
பண் :
பாடல் எண் : 2
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.
பொழிப்புரை :
இறைவர் திருக்கரத்தில் இரண்டு அம்பிருக்கக் கண்டிலேம்; கண்டது ஓரம்பே; அந்த ஓர் அம்பும் திரிபுரம் எரித்தற்கு அதிகமேயாயிற்று என்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
``ஏகம்பர் தங்கையில்`` என்றதனை முதலில் வைத்து. ``ஓரம்பே`` என்றதன்பின், `கண்டனம்` என்பது வருவிக்க, ``முப்புரம்`` என்று அருளினாராயினும், `புரம் மூன்று` என உரைத்தல் திருவுள்ள மாம். ஆகவே, `இறைவர் கையில் இருந்தது ஓரம்பே; பகையாய் எதிர்ந்த புரங்களோ மூன்று; எனினும், அவைகளை அழித்தற்கு அவ் ஓர் அம்புதானும் சிறிதும் வேண்டப்படாதாயிற்று` என்பது பொருளாதல் அறிக. சிவபெருமான் திரிபுரங்களை அம்பு முதலிய வற்றால் அழியாது, புன்சிரிப்பானே அழித்தமையின், அவ் ஓர் அம்பும் வேண்டப்படாததாயிற்று. இதனால், இறைவன், எல்லாவற்றையும் கரணத்தானன்றிச் சங்கற்பத்தானே செய்தலைக், கூறியவாறு. ``பெருமிகை`` என்றதன்பின், `என்று` என்பது வருவிக்க.
பண் :
பாடல் எண் : 3
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.
பொழிப்புரை :
தேவர்கள் தேரினை இணைத்து விடுத்ததும், அத் தேரில் இறைவன் திருவடியை வைத்ததும், தேரினது அச்சு முறிந்தது; எனினும் முப்புரங்கள் அழிந்தன என்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`தைத்து` என்பது `தச்சு` எனப் போலியாயிற்று. `தைத்தல், அழகுபடச்செய்தல் என்பது, ``வேலன் தைஇய வெறியயர் களனும்` (தி.11 திருமுருகா -222.) என்றற்றொடக்கத்தனவாக வருவனவற்றான் அறிக. மகளிர்க்கு, `தையலார்` என்னும் பெயரும், தம்மை ஒப்பனை செய்துகொள்ளுதலாகிய காரணம் பற்றிவந்ததாம். `தையல்` என ஒருமைக்கண் வருதல் ஆகுபெயர். இப்பொருட்டாகிய `தையல், தைத்தல்` என்பன பிற்காலத்தில், துன்னத்திற்கும், துன்னம் செய்தற்கும் உரியவாயின. ஒருவகைத் தொழிலை உணர்த்தும் `தச்சு` என்னும் பெயர்ச் சொல், இங்கு, வினையெச்சமாய் வந்த `தச்சு` என்பதனின் வேறு. `தச்சு` என்பது அடியாக, `தச்சன், தச்சர்` முதலிய ஒட்டுப் பெயர்கள் பிறக்கும். ``தச்சு`` என்றதற்கு, `தேர்` என்னும் செயப்படு பொருளும், அச்சுமுரிதலுக்கு, அஃது என்னும் எழுவாயும், வருவிக்க.
``தாம்`` என்றது, முன்னை திருப்பாட்டில், ``ஏகம்பர்`` எனக் குறிக்கப்பட்டவரை என்பது வெளிப்படை. `இடலும்` என்பது விரித்தல் விகாரம் பெற்றது. `அடியிட்டபொழுதே அச்சு முறிந்தமை அவரது வன்மையையும், பிறரது மென்மையையும் எளிதின் விளக்கும்` என்பதும், `தேர் அச்சு முறிந்ததாயினும் அவர் முப்புரத்தை அழிக்கக்கருதியது முடிந்தேவிட்டது` என்பதும் குறித்தவாறு. ``அழிந்தன`` என்றதற்குமுன், `ஆயினும்` என்பது வருவிக்க.
பண் :
பாடல் எண் : 4
உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.
பொழிப்புரை :
பிழைக்க வல்லவராயிருந்த மூவரையும் கயிலைக்குத் துவார பாலகராகச் செய்து முப்புரத்தை அம்பேவி எரிக்க வல்லவனாகிய உமாதேவி பாகனைக்குறித்து உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
உய்ய வல்லார் - யார் யார் எத்துணை மயக்க உரை களைக் கூறினும் அவற்றைக் கேளாது நன்னெறியைக் கடைப்பிடிக்க வல்லவர், ஒரு மூவராவார், `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` என்னும் பெய ருடைய அசுரர். இவர்கள் திரிபுரத்தில் வாழ்ந்தவர்கள். திரிபுரத் தலைவர்களாகிய, `தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்பவர், முதலில் தாங்களும் சிவநெறியில் ஒழுகிப் பிறரையும் ஒழுகச்செய்து, பின்பு திருமால் புத்த வடிவம் கொண்டு நாரத முனிவ ருடன் சென்று புத்த சமயத்தைப் போதித்தபொழுது புத்தர்களாய்ச் சிவநெறியைக் கைவிட, ஏனையோரும் அவ்வாறே சிவநெறியைக் கைவிடவும், இம்மூவர் மட்டில் சிவநெறியிலே நின்றமைபற்றி இவரை, ``உய்ய வல்லார்`` என்றும், சிவபெருமான் திரிபுரத்தை எரித்த பொழுது இம்மூவரை மட்டில் அழியாதவாறு காத்து ஏனைய பலரை யும் அழித்தமை பற்றி ``ஒரு மூவரைக் காவல்கொண்டு எய்ய வல்லான்`` என்றும் அருளிச்செய்தார்.
``மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள்செய்தார்`` -தி.1 ப.69 பா.1
என இதனைத் திருஞானசம்பந்தரும் எடுத்தருளிச்செய்தல் காண்க. `திரிபுரங்கள் அழிக்கப்பட்ட பொழுது அழியாது பிழைத்தவர் மேற்குறித்த மூவரே` என்பதையும், பின்பு அவர்கள், சிவபெருமான் திருவருளால் அப்பெருமானது வாயில் காவலராயினர்` என்பதையும்,
முப்பு ரங்களின் மூவர் புத்தன்
மொழித்தி றத்தின் மயங்கிடாது
அப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு
ளாற்றின் நின்றனர் ஆதலால்
பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை
நாவின் மன்னவர் போல்எரி
தப்பி வாழ்ந்தனர் ஈசன் ஆணையில்
நிற்ப வர்க்கிடர் சாருமோ.
சுதன்மன் என்று சுசீலன் என்று
சுபுத்தி என்று சொலப்படும்
அதன்மம் நீத்தஅம் மூவருக்கும்
அருள்சு ரந்துமை பாகனார்
இதம்வி ளங்க வரங்கள் வேட்ட
விளம்பு மின்என அங்கவர்
பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி
வாயில் காப்பருள் என்றனர்.
என்றற் றொடக்கத்துக் காஞ்சிப் புராணச் செய்யுட்காளான் அறிக. காஞ்சிப் புராணத்துள் இங்ஙனம் `வாயில் காப்பு` எனப் பொதுப்படக் கூறி இருப்பினும், `மூவருள் இருவர் வாயில் காவலரும், ஒருவன் இறைவனது திருக்கூத்திற்கு மத்தளம் முழக்குபவனும் ஆயினர்` என்பதை,
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூருளானே.
(தி.7 ப.55 பா.8) என்னும் சுந்தரர் திருமொழியான் உணர்க. `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` என்ற முறைபற்றி, `இறுதியிற் சொல்லப் படுபவனே மத்தளம் முழக்குவோனாயினன்` என்று கொள்ள இடம் உண்டு. வாயில் காவலரை இப்பொழுது, `திண்டி, முண்டி` என்கின்றனர். இவ்வசுரர்கள் சிவபெருமான் கோயிலில் வாயில் காவலர் ஆயினமையை அடிகளும் திருத்தோணோக்கத்து ஒன்பதாம் திருப்பாட்டில் குறித்தருளுதல் காண்க. ``வல்லானுக்கு`` என்றதும், ``என்று`` என்றதும் எஞ்சிநின்ற, `பாடி` என்பதனோடு முடியும். பாடுதலுக்கு இறைவனைச் செயப்படு பொருளாகவன்றிக் கொள்வோனாகக் கருதினமையின், ``வல்லானுக்கு`` எனக் குவ்வுருபு கொடுத்து ஓதினார்; பின்வருவனவற்றிற்கும் இது பொருந்தும். இத் திருப்பாட்டால், சிவபெருமானது அருளையும், ஆற்றலையும் வியந்தவாறு.
பண் :
பாடல் எண் : 5
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.
பொழிப்புரை :
தக்கனது யாகம் குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர மூர்த்தியாகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
``சாடிய`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் `சாடியதனால்` என்பது கருத்தாயிற்று. இங்கு `வேள்வி` எனப்படுவது, தக்கனுடையதே என்பது இனிது விளங்கிக் கிடக்கும். உருத்திரநாதன், இருபெயரொட்டு. `உருத்திர நாதனுக்குப் பாடி` என இயையும். இனி, `உருத்திரநாதனாகிய ஒருவனுக்குத் தேவர் பலர் உடைந்தோடிய வாற்றைப் பாடி` என உரைப்பினுமாம்.
பண் :
பாடல் எண் : 6
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.
பொழிப்புரை :
பிரம தேவனுக்குத் தந்தையாகிய, திருமாலானவன் தக்கன் வேள்வியில் அவியுணவைக் கொண்டு, அந்நாளில் வீரபத்திர ரால் பெரிதும் தாக்கப்பட்டு உயிர் ஒன்றையுமே உடையவனாய் இருந்தான் என்று சொல்லி, உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
ஆவா, இரக்கக் குறிப்பு; இதனை, ``இருந்தான்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``சாவாதிருந்தான்`` என்றது. `உயிர் போதல் ஒன்றொழிய ஏனை எல்லாத் துன்பங்களையும் எய்தினான்` என்றவாறு. வீரபத்திரரது தண்டத்தால் மார்பில் அடியுண்டு மூர்ச்சை யுற்றுக் கிடந்த நிலையை இவ்வாறு அருளிச் செய்தார். திருமால் எய்தியதாக யாண்டுங்காணப்படும் இந்நிலையையே அடிகள் அருளிச் செய்ததன்றி, அவன் தலையறுப்புண்டதாக ஒரோவிடத்துக் கூறப் படும். அதனை அடிகள் அருளிச்செய்திலர். `உலகையெல்லாம் படைப்பவனைப் படைத்த பெரியோன்` என அவனது பெருமையை எடுத்துக் கூறுவார், ``சதுர்முகன் தாதை`` என்று மறித்தும் அருளிச் செய்தார்.
பண் :
பாடல் எண் : 7
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
பொழிப்புரை :
கொடியவனாகிய அக்கினிதேவன் அவியுண்ண வளைத்த கையை வெட்டினான் என்று உந்தீபற, வெட்டுதலும் யாகம் கலங்கிற்று என்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`வெம்மை யுடைவன்` என்னும் பொருளதாகிய, `வெய்யவன்` என்பது, `கொடியவன்` என்னும் நயத்தைத் தோற்று வித்து, ஒறுக்கப்படுதற்குரிய இயைபுணர்த்திநின்றது. `விருப்பமுடைய வனாய்` எனவும் உரைப்ப. திரட்டுதலுக்கு, `அவிப்பாகம்` என்னும் செயப்படுபொருள், முன்னைத் திருப்பாட்டினின்றும் வந்து இயையும்.
பண் :
பாடல் எண் : 8
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.
பொழிப்புரை :
பார்வதி தேவியைப் பகைத்துப் பேசின தக்கனை உயிரோடு வைத்துப் பார்ப்பதனால் சிவபெருமானுக்கு என்ன பயன்? என்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`பர்வதம்` என்பது, `பருப்பதம்` என வருதல் போல, `பார்வதி` என்பது, `பார்ப்பதி` எனவந்தது. `மலைமகள்` என்பதே இதன் பொருள்; எனினும், இங்கு, `இறைவி` என்னும் பொருளதாய் நின்றது. பார்ப்பது - கண்ணோடுவது. `இறைவி என்று கருதாமல் ஏனையோர்போலக் கருதிய அறிவிலியாகிய அவன்மீது கண்ணோட்டஞ் செய்து இகழாதொழிதல் வேண்டா` என்றபடி. எனவே, `அவனை மிக இகழ்ந்தும், சிவனை மிகப்புகழ்ந்தும் பாடி ஆடு` என்றதாயிற்று. குற்றம் செய்தவரை ஒறுத்தல் அரசர்க்கு முறைமையாதல்போல, குற்றம் செய்தவரை இகழ்தலும் அறிவுடை யோர்க்கு முறைமையாதலின், இவ்வாறு அருளிச்செய்தார்
பண் :
பாடல் எண் : 9
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.
பொழிப்புரை :
இந்திரன் ஒரு குயில் உருக் கொண்டு ஒரு மரத்தில் ஏறினான்; அவன் தேவர்களுக்கு அரசன் என்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
புரந்தரன் - இந்திரன். பூ - அழகு. `தக்கன் வேள்வியில் வீரபத்திரருக்கு அஞ்சி இந்திரன் குயில் உருவங்கொண்டு ஓடி ஒளிந்தான்` என்பது வரலாறு. ``வானவர் கோன்`` என்றதும், முன்னர் ``சதுர்முகன் தாதை`` (தி.8 திருவுந்தியார். பா-6.) என்றதனோடு ஒப்பது. ``கோன்`` என்றது, பன்மை யொருமை மயக்கம்.
பண் :
பாடல் எண் : 10
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.
பொழிப்புரை :
கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`வெஞ்சினத்தால் தொடங்கிய வேள்வியையுடைய வியாத்திரனார்` என்க. வெஞ்சினம், சிவபெருமான்மீதெழுந்தது. வியாத்திரன் - மாறுபட்ட செலவினையுடையவன்; தக்கன். ``மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.9) என்னும் திருத்தாண்டகத் தொடருள், ``வேறாக`` என்றதனால், இப்பெயர் தக்கனைக் குறித்தல் இனிதுணரப்படும். துஞ்சுதல் - அழிதல். ஈண்டுச் சிவபெருமானது வெற்றியையே பெரிதும் பாடுதல் பற்றி, தக்கன் உயிர்த்தெழுந்தமையை அருளாது, அவன் துஞ்சியது மாத்திரையே அருளினார். தொடர்ந்த - பண்டுதொட்டு விடாது வந்த, `பிறப்பு அறப்பாடி` என இயையும்.
பண் :
பாடல் எண் : 11
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.
பொழிப்புரை :
சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
விதி - சிறுவிதி; தக்கன். `சிறுவிதி` என்னும் பெயர், பிரமன் மகனாயினமை பற்றிக் கூறப்படுவது. யாட்டின் தலையை அமைத்ததும் ஒறுப்பேயாகலின், இதுவும் வெற்றி கூறியதேயாயிற்று.
பண் :
பாடல் எண் : 12
உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற.
பொழிப்புரை :
நமது பிறவி ஒழியும் வண்ணம் அவிர்பாகத்தை உண்ண வந்த பகனது கண்ணை அவன் ஓடாமற் பறித்த விதத்தைப் பாடி உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`அவியை உண்ண` என வருவித்துரைக்க. பகன், ஆதித்தர் பன்னிருவருள் ஒருவன். `நாமெலாம் கருக்கெட` என மாற்றி, எஞ்சி நின்ற `பாடி` என்பதனோடு முடிக்க. ``கரு`` என்றது, `கருவில் வீழ்தல்` எனப் பொருள் தருதலின், `நாமெலாம் கருக் கெட` எனத் தொழில், முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டதாம்.
பண் :
பாடல் எண் : 13
நாமகள்நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன்னெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.
பொழிப்புரை :
நமது பழவினை ஒழிய, சரசுவதியின் மூக்கும் பிரமன் சிரமும் அற்று விழச் செய்து, சந்திரனைத் தேய்த்து, யாக பங்கம் செய்த செய்தியைக் குறித்துப் பாடி உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
``பட`` என்றதனை, ``நாசி`` என்றதனோடும் கூட்டி, `நாமகள் நாசி படவும், பிரமன் சிரம்படவும்` என உரைக்க. சோமன் - சந்திரன். முகன் - முகம்; போலி. னகரவொற்று விரித்தல். `முகம்` என்பது பாடமாயின், நகர வொற்று விரித்தலாம். `நெரித்தது` என்பது குறைந்து, `நெரித்து` என நின்றது. நெரித்தது - காலால் தேய்த்தது. இதன்பின், `பாடி` என்பது எஞ்சிநின்றது. `நெரிந்து` எனப்பாடம் ஓதி, அதனையும், `நெரிந்தது` எனக் கொண்டுரைத்தல் சிறக்கும். இதனுள், வீரபத்திரரால் நாமகள் மூக்கிழந்தும், பிரமன் தலையிழந்தும், சந்திரன் தேய்க்கப்பட்டும் போயினமை அருளப்பட்டது. இதனுள், ``பிரமன்` என்றது, முன்னர், ``விதி`` என்றதுபோல, தக்கனையே குறித்தது என்பாரும் உளர். தக்கனை, `சிறுவிதி` என்றல்போல, `சிறு பிரமன்` என்றல் வழக்கின்கண் இன்மையானும், தக்கன் தலையிழந்து மாற்றுத் தலை பெற்றமை முன்னர்க் கூறப்பட்டமை யானும் அது பொருந்து மாறில்லை.
பண் :
பாடல் எண் : 14
நான்மறை யோனு மகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற.
பொழிப்புரை :
பிரமனும் யாகாதிபனாகிய தக்கனும் இறந்து வீழ்தலும் இந்திரன் ஓடிப்போய் வழியைத் தேடுகிற விதத்தைக் குறித்து உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
``வேள்வியில்`` என்றதனை முதலிற்கொள்க. நான் மறையோன் - பிரமன். அகத்து இயமான் - நடுவிடத்தில் இருந்த தலைவன்; தக்கன். `இயமானன்` என்பது, குறைந்து நின்றது; இது வேட்போனைக் குறிக்கும் ஆரியச் சொற்சிதைவு. ``இயமானன்`` என்றதன்பின்னும் உம்மை விரிக்க. `மகத்தியமான்` எனவும் பிரிப்பர். `பட` என்பது, `பட்டமையால்` எனக் காரணப்பொருளில் வந்தது. `புரந்தரன் தேடுமாறு` என இயையும். முன்னர், ``இந்திரனைத் தோள் நெரித்திட்டு`` (தி.8 திருவம்மானை-15.) என்றமையால், இங்கு, `போம் வழிதேடுதல்` என்றது, அங்ஙனம் தோள் நெரிந்து மன வலியிழந்தமையையேயாம். ஆகவே, `நான் மறையோனும், அகத்தியமானும் பட` என்றது மனவலி இழத்தற்குக் காரணங்கூறும் அளவிற்றாய் வந்ததாம். `வேட்பிப்போனும், வேட்போனும் பட்டமையின், அவியைப் பெறுவோருள் முதல்வனாகிய இந்திரன் ஆங்கு நிற்க வல்லனோ` என்றபடி. முதற்கண் அவிபெறுவோனாகிய இந்திரனது எளிமை மிகுதியுணர்த்தற்கு அவன் குயிலாகி ஓடினமை முன்னர்க் கூறப்பட்டதாயினும், `தோள்நெரிந்த பின்னரே அவ்வாறு ஓடினான்` என்றற்கு, இதனை அருளிச்செய்தார் என்க.
பண் :
பாடல் எண் : 15
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
பொழிப்புரை :
சூரியனது பற்களைத் தகர்த்த விதத்தைக் குறித்தும் வேள்வி கலக்கமடைந்ததைக் குறித்தும் உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
`கண் பறிக்கப்பட்டான்` (தி.8 திருவுந்தியார். பா-12.) என முன்னர்க் கூறப்பட்ட சூரியன், `பகன் என்னும் பெயரினன் என்பது அங்கு எடுத்து ஓதப்பட்டது.
அதனால், இங்குப் பல் தகர்க்கப் பட்டவனாகக் குறிக்கப்படும் சூரியன் வேறொருவன் என்பது வெளிப்படை. இவன் பெயர், `பூடன்` எனப்படுகின்றது.
பண் :
பாடல் எண் : 16
தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.
பொழிப்புரை :
தக்கன் தன் மக்களால் சூழப்பட்டிருந்தும் தலை யிழக்கப் பெற்றான் என்றும் வேள்வி அழிந்தது என்றும் உந்தீபறப் பாயாக!
குறிப்புரை :
``அன்றே என்பது, `முன்னரே` எனப் பொருள் தந்தது. `தக்கன் முன்னரே இறந்தமையால், வேள்வி, பின்னர் அவன் மக்களைச் சூழ நின்று மடிந்தது` என்க. மடிதல் உயிர்கட்கன்றிப் பிறவற்றிற்கின்மையின், வேள்வியில் வந்தாரது தொழில் வேள்வி மேல் ஏற்றி, ``மடிந்தது வேள்வி`` எனப்பட்டது. இதனானே, ``சூழநின்று`` என்றதும், அவ்வாற்றாற் கூறப்பட்டதேயாயிற்று.
இதனுடன் தக்கன் வேள்வி பற்றியவற்றை முடிக்கின்றா ராகலின், இறுதிக்கண் இவ்வாறு தொகுத்தருளிச்செய்தார். தக்கன் வேள்வி செய்த ஞான்று அவன் மைந்தர் ஆண்டிருந்திலர் என்பது கந்த புராணத்தால் அறியப்படுதல்பற்றி, ஈண்டு, ``மக்கள்`` எனப்பட்டார் பெண்மக்களே என்பர். எனினும், அடிகள் திருமொழிக்கு அவ் வரலாற்றினை அடியாகக்கொண்டு உரையாது, வேறுபட உரைத்தல் இழுக்காது.
பண் :
பாடல் எண் : 17
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.
பொழிப்புரை :
முன்னாளில் ஒரு பாலகனுக்குப் பாற்கடலைத் தந்தருளின சிவபெருமான் பொருட்டு உந்தீபற; குமரவேள் தந்தையின் பொருட்டு உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
பாலகனார், உபமன்னிய முனிவர். இவர் வியாக்கிர பாத முனிவர் மைந்தர். இவர் தம் தாய்மாமனாராகிய வசிட்ட முனிவர் இல்லத்தில் காமதேனுவின் பாலை உண்டு வளர்ந்து, பின் தம் தந்தையார் இல்லத்தை அடைந்தபொழுது பால் வேண்டி அழ, அவர், `சிவபெருமானை வேண்டி அழுக` என, அவ்வாறே வேண்டி அழுத பொழுது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அச்சிறு முனிவரிடம் வரச் செய்தார் என்பது புராண வரலாறு. இதனைக் கோயிற் புராணம் விரித்து விளக்கும். இது, ``பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற் கடல் ஈந்தபிரான்`` (தி.9 பா.9) எனத் திருப்பல்லாண்டினும், ``அத்தர் தந்த அருட் பாற் கடல்உண்டு - சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்`` (தி.12 திருமலைச் சிறப்பு. 15.) எனத் திருத்தொண்டர் புராணத்தினும் கூறப் பட்டது. கோலம் - அழகு. குமரன் - முருகன். `மகனைப் பெற்றவ னாதலின் மகவருமை அறிந்து அளித்தான்` என்றபடி. இரண்டிடத்தும், `பாடி` என்பது வருவிக்க. `பெரிதாகிய பாற்கடலைச் சிறுவர்பால் வருவித்தான்` என வெற்றி கூறியவாறு.
பண் :
பாடல் எண் : 18
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.
பொழிப்புரை :
பிரமனது சிரம் விரைவில் அரியப்பட்டது என்றும் அதுவும் சிவபெருமானது நகத்தால் அரியப்பட்டது என்றும் உந்தீபறப் பாயாக!
குறிப்புரை :
நன்மை - அழகு. `அழகிய மலரின்மேல் அழகுடன் வீற்றிருந்த அவன், தலை இழத்தலாகிய பேரிழிவை எய்தினான்` என்பது நயம். ஒல்லை - விரைவு. உகிர் - நகம். பிரமனும், திருமாலும் தாங்களே முதற்கடவுளர் எனத் தருக்கித் தம்மிற்போர் செய்தபொழுது சிவபெருமான் ஒரு சோதி வடிவாய்த் தோன்ற, திருமால் அவரை வணங்கினார். பிரமனோ, தனது ஐந்து தலைகளுள் உச்சித் தலையினால் சிவபெருமானை இகழ, சிவபெருமான் வைரவக் கடவுளைத் தோற்றுவித்து, அவரால் அவ்வுச்சித் தலையைக் கிள்ளி விடச் செய்தனர் என்னும் வரலாற்றைக் கந்த புராணம் ததீசி யுத்தரப் படலத்துட் காண்க.
பண் :
பாடல் எண் : 19
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.
பொழிப்புரை :
தன் தேரை நிறுத்திக் கயிலாய மலையைத் தூக்கின இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிந்த விதத்தைக் குறித்து உந்தீபறப்பாயாக!
குறிப்புரை :
தேர் - புட்பக விமானம். இது, குபேரனிடத்தினின்றும் திக்குவிசயத்தில் கொண்டது. மலை, கயிலாயமலை. இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்தபொழுது சிவபெருமான் தமது திருவடிப் பெருவிரல் ஒன்றினால் சிறிது ஊன்ற, அவன் அம்மலையின் கீழ், பன்னாள் அழுதுகொண்டு கிடந்தான் என்னும் வரலாறு நன்கறியப் பட்டது. ``சிரம் ஈரைந்து`` என்றமையால், ``இருபது`` என்றது தோள்களாதல் வெளிப்படை. ``இருபதும்`` என ஒருங்கு தொகுத்தமையின் ``இற்றது`` என்று அருளினார்.
``பொருள்மன்ன னைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருள்மன்ன னைஎற்றி`` (தி. 4 ப.17 பா. 11)
என்று திருநாவுக்கரசர் அருளிச்செய்தமை காண்க.
பண் :
பாடல் எண் : 20
ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற.
பொழிப்புரை :
மேலாடை அணிந்துள்ள, முனிவர்கள் அழிந்து போகாமல், ஆகாயத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும், ஆகாயத் துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும் உந்தீபறப் பாயாக!
குறிப்புரை :
ஏகாசம் - உத்தரீயம். `போர்வை` எனவுங் கூறுவர். முனிவர்கள் `சூரிய மண்டலத்தருகில் இயங்குவர் என்பதனால், `அங்கு அவர்களையும், அவர்கட்குமேல் உள்ள மற்றையோரையும் காப்பது சிவபெருமானது திருவருள்` என்பது இதன் திரண்டபொருள். முனிவர்கள் சூரிய மண்டலத்தருகில் இயங்குதலை, ``நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் - தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் - காலுண வாகச் சுடரொடு கொட்கும் - அவிர்சடை முனிவர்`` (புறம் - 43.) என்பதனானும் அறிக. `ஆகாசத்தில்` என உருபு விரிக்க. இரண்டிடத்தும் ``காவல்`` என்ற எழுவாய்க்கு `உள்ளது` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. ``அதற்கு`` என்றது, கூன்.
Comments
Post a Comment