பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி

வந்தாரை வாழ வைக்கும்
தென் பொதிகை மலை
தமிழ்க் குறுமுனி அகத்தியர் கூடம்!
----------------------------------------------------------------------
திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 1868மீட்டர் அதாவது 6129 அடி உயரத்தில் உலக நன்மைக்காகத் தவமிருக்கும் அகத்தியரை நேரில் சென்று தரிசனம் செய்து வழிபாடு செய்ய ஆர்வம் உடையவரா நீங்கள்...!?

திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக தமிழகப் பக்தர்கள் பன்னெடுங்காலமாக மிகவும் கடினமாக பயணம் செய்து அகத்தியர் பெருமானைத் தரிசித்து வந்தனர்!

இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக அரசு வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்லலாம் என அறிவுறுத்தியது!

இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக "eco-tourism சூழலியல் சுற்றுலா"-வாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர்!

இதற்காக கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம்  வட்டியூர்காவு PTP நகரிலுள்ள கேரள  வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு கட்டணத்துடன் கூடிய அனுமதி ஒவ்வொரு ஆண்டும் January February ஆகிய மாதங்களில் வழங்கப்படுகிறது!

தை மாதம் மகரவிளக்கு நாளிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே பயணம் செய்ய இயலும்!

14 வயதிற்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண்கள் பெண்கள் இருபாலரும் பயணம் செய்யலாம்!

எனும் வலைதளத்தில் சென்று online-ல் booking செய்து பயணம் செய்யலாம்!

முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தினமும் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்!

கேரளத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு Nedumangadu - விதுரா Vithura - Bonacaud போனக்காடு Bonakkad பஸ்சில் பயணிக்கலாம்!

திருவனந்தபுரத்திலிருந்து தினமும் அதிகாலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம்!

திருவனந்தபுரம் தம்பானூர் Bus-stand பேருந்து நிலையம் மற்றும் Central Railway Station சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 61 கி.மீ. தொலைவிலும் Airport விமான நிலையத்திலிருந்து 69 கி.மீ. தொலைவிலும் போனக்காடு உள்ளது!

போனக்காடு பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம்!

போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்றால் Bonacaud Picket Station போனக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடம் வரும்!

அங்கிருந்து தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள guides வழிகாட்டிகளுடன்  இரண்டு அல்லது மூன்று நாள் பொதிகை மலை ஆன்மிக நடைப்பயணம் தொடங்கும்!

போனக்காட்டில் காலை 8 மணிக்கு பயணம் ஆரம்பமாகும்! பயணம் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது!

சுமார் 8 கி.மீ. தூரமுள்ள இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் மாலை வேளையில் Athirumalai Estate அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்!

அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர்!

மறுநாள் அதிகாலையிலேயே அகத்தியக் குறு முனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, "அதிருமலை"யின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு அடுத்த 8 கி.மீ.க்கான அடுத்தக்கட்ட ஆன்மிக நடைபயணம் ஆரம்பமாகும்!

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு!

அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு, மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான "சங்கு முத்திரை" என்ற இடம் வரவேற்கும்!

இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் சங்கு முத்திரை!

கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை" என்று கூறுகின்றனர்!

கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது!

இந்த சங்குமுத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான "பொருநை" என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் "பூங்குளம்" என்ற சுனை தெரியும்!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தைத் தொடர வேண்டும்!

செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் இரும்புக் கயிறுகளைப் (ரோப்-Rope) பிடித்துக் கொண்டு (ஒருபுறம் கால் சிறிது இடறினால் கூட கிடுகிடு அதள பாதாளத்தில் விழ நேரிடும்) மிகவும் கவனத்துடன் நான்கு கால்களையும் ஊன்றி நிதானமாக ஏறிச் சென்றால் கடல் மட்டத்தில் இருந்து 6129 அடி அதாவது 1868 மீட்டர் உயரமுடைய "பொதிகை மலை" உச்சியை சிகரத்தை நாம் அடையலாம்!

பொதிகை மலை உச்சியில் குறுமுனி அகத்தியரைப் போலவே மிகவும் குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது...

நாம் மிகவும் சிரமப்பட்டு மலை ஏறி வந்த சிரமங்கள் எல்லாம் மறந்து, இந்த அதி அற்புதமான நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் வந்தாரை வாழ வைக்கும் சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய அகத்தியர் பெருமானின் ஆனந்தத் தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்கின்ற உச்சக்கட்ட பரவச நிலை உண்மையான பக்தர்களாகிய நமக்குத் தோன்றும்!

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர் திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு பலத்தக் குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும்!

ஆன்மிக மணமும் மனமும் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியப் பெருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து வழிபாடு செய்த பின்னர் உள்ளம் நிறைவுடன் மீண்டும் நம் இல்லம் நோக்கியப் பயணம் இனிதே ஆரம்பமாகும்!

அகத்தியர் மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, சுமார் மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம்.

அதிருமலை கேம்ப் ஷெட்டில் உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் இரவு 7 மணிக்கு அங்கே கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்!

முதல் நாள் இரவைப் போலவே, இரண்டாம் நாள் இரவும் அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்!

மிகவும் வேகமாக நடைபயணம் செய்பவர்கள் சிலர் இரண்டாம் நாள் அதிகாலையிலேயே புறப்பட்டு அகத்தியரைத் தரிசித்து விட்டு விறுவிறுவெனக் கீழிறங்கி அதிருமலையிலிருந்தும் கீழிறங்கி போனக்காடு பிக்கெட் ஸ்டேஷன் வந்தடைவோரும் உண்டு!

இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமானக் காற்று, மூலிகை கலந்த நீர் இவையெல்லாவற்றையும் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும்! உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும்!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க் குறுமுனி அகத்தியர் பெருமானைத் தரிசிக்க ஜனவரி மாதம் தை மாதம் மகரவிளக்கு முதல் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் மாசி மாதம் சிவராத்திரி வரை அனுமதி வழங்கப்படுகிறது!

நேரிலும் ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைப் பெறலாம்!

ஆகிய website-ல் apply பண்ணலாம்!

இந்த 2020-ஆம் ஆண்டிற்கான பயணத்தில் பொதிகை மலை செல்ல விரும்புகிறவர்கள் ஆன்லைனிலும் நேரில் சென்று கேரள வனத்துறையிலும் பதிவு செய்யலாம் எனக் கேரள வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

14 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 1100-ம் இந்தியர் அல்லாத வெளிநாட்டவராக இருப்பின் ரூபாய் 2200-ம் அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படும்!

ஒன்று முதல் ஐந்து பேர் வரை உள்ள குழுவினருக்கு சேவைக் கட்டணமாக 50 ரூபாயும் பத்து பேர் வரை உள்ள குழுவினருக்கு சேவைக் கட்டணமாக 70 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும்!

இதற்கான முன்பதிவு 08-01-2020 புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்குகின்றது!

இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர்காவு வனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம்.

10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது!

இதற்கான பதிவு செய்பவர்கள் கண்டிப்பாகப் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின் போதும் வைத்திருக்க வேண்டும்!

Toll Free Number
1800 425 4733
+91 85476 02951
+91 471 2360762
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்! ஓரளவு மலையாளம் தெரிந்தவர்கள் பேசுவது நல்லது!

அதி அற்புதங்கள் ஆனந்தங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களைக் காணக் கிடைக்கும் ஒரு புதிய இனிய ஆன்மிக பயண அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக பொதிகை மலைக்கு உடனடியாகக் கிளம்பி விடலாம்!
********************************************

உயிரினங்களின் வகைகள்:
------------------------------------------------
6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது பொதிகை மலை!

இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர் அதாவது 6129 அடி!

நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன! ஆனால், பொதிகை மலையில் 121 உள்ளன!

27 வகை மீன்கள், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன!

177 வகை ஊர்வனவற்றில் 157 வகைகள் பொதிகை மலையில் மட்டும் உள்ளன. அதிலும் 39 வகைகள் இங்கு மட்டுமே வாழ்கின்றன!

கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260-ல் 60-க்கு மூல-வித்து இங்கு உள்ளது!

நாமறிந்த மீன் வகை 165. ஆனால் பொதிகையில் வசிப்பதோ 218.
-----------------------------------------------------------------------

நுண்ணுயிர் முதல் மந்தி வரை:
*********************************
புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன!

இந்தப் பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்து பூமியானது.

அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்!

பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகை மலையும் தோன்றியிருக்கலாம்!
-----------------------------------------------------------------------

ரகசிய மூலிகைகள்:
*********************
பசிக்கவே செய்யாத மூலிகை, நீண்ட ஆயுள் தரும் மூலிகைகள் எனப் பல இரகசிய மூலிகைகள் இங்கு ஏராளமாக வளர்ந்து கிடக்கின்றன!

இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அகஸ்தியர் கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது!
-----------------------------------------------------------------------

மூலிகைகளின் மூல ஸ்தானம்:
********************************
பொதிகை மலைதான், மூலிகைகளின் மூல ஸ்தானம்!

மூட்டு வலியைப் போக்கும் பளிங்குக்காய்

தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை

விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு

சர்க்கரை நோயைப் போக்கும் பொன் கொரண்டி

எனப் பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன!

7 வகைப் பனைகள்

10 ஆண்டுகளில் காய்த்து,
காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை

பட்டையால் பாம்பின் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள்

பொதிகை மலையில் வளர்கின்றன!

கொழித்துக் கிடக்கும் குலவு, புலவு
உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள்
5640-ல் 2654 வகை இங்கு உள்ளன!

600-க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு,
விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு,
சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு மற்றும் செருப்படை
போன்ற மூலிகைகள் இங்கு செழித்துக் கொழித்துக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன!
-----------------------------------------------------------------------

பொதிகைமலை!

இந்தப் பெயரைக் கேட்டவுடனே நம் நினைவில் வருவது தாமிரபரணியும், தமிழும், அதைத் தோற்றுவித்த சித்தர் அகத்தியப் பெருமானும் தான்!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்ச் சித்தர் அகத்தியப் பெருமானை வழிபட்டு வருவோருக்கு வேண்டுவன எல்லாம் வேண்டிய படி விரைவில் நிறைவேறட்டும்! வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------------------
பல்வேறு தகவல்கள் குறிப்புகள் அனுபவங்கள் ஆராய்ச்சிகள் ஆகியவை மூலம் இந்தப் பதிவு முழுமையடைய உதவியாக இருந்த மூலப்பதிவர் திரு.முத்துசுவாமி மாணிக்கவாசகர் மருத்துவர் சென்னை அவர்களுக்கும் அகஸ்தியர் கூடம் அன்பர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் எமது அன்பார்ந்த நன்றி!
-----------------------------------------------------------------------
பின் குறிப்பு:
**************
மலையேற்றம் குழுக்கள் நடத்தும் தனியார் வியாபாரிகள் முன்னரே பல்வேறு விளம்பரங்கள் மூலமாக கூடுதல் பணம் வசூலித்து, இந்த ஆண்டின் ஆன்லைன் முன்பதிவு 08-01-2020 காலை 11 மணிக்கு ஆரம்பித்த உடனேயே ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் மொத்தம் 36 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 3600 முன்பதிவு இடங்களையும் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்து, தற்போது இந்த ஆண்டின் ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றது! நேரடி அனுமதி பெற
Toll Free Number 1800 425 4733 ஐத் தொடர்பு கொள்ளவும்! நன்றி!
********************************************
என்றென்றும் அன்புடன்
உலகத் தமிழ்ச் சோதிடக் கலாலயம்‌
+91 948 6666 739
+91 9489 221 739
+91 4637 221 739
********************************************

Comments

Post a Comment

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala