யோகங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் 144 வகையான யோகங்கள் இருக்கின்றன. இவற்றுள் ஏதெனும் ஒன்று, ஒரு மனிதனின் ஜாதகத்தில் நிச்சயம் இருந்தே தீரும். வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான யோகங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

கஜகேசரியோகம்:

ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,4, 7 மற்றும் 10 ஆம் இடத்தில் குரு அமையப் பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூடத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.

கிரகமாலிகா யோகம்:

ராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாய் நிற்குமானால், அது கிரகமாலிகா யோகம். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.

கேதார யோகம்:

ஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானம் அல்லாத ஏதேனும் நான்கு வீடுகளில் (ஸ்தானங்களில்) எல்லா கிரகங்களும் பரவலாக நிற்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இதை 'சங்க யோகம்' என்றும் 'கேதார யோகம்' என்றும் கூறுவார்கள். அரசியல் செல்வாக்குப் பெருகும்.

காமிய யோகம்:

லக்னாதிபதி சுபருடன்கூடி பலம் பெற்றிருக்க, 2 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 7 ஆம் இடத்தில் சந்திரன், 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பை, 'காமிய யோகம்' என்பார்கள். பொன், பொருள், பூமி ஆகியவற்றைப் பெற்று யோகமாக வாழ்வார்கள். விரும்பியவர்களையே மணந்துகொள்வார்கள்.

கார்முக யோகம்:

லக்னத்தில் ஜீவனாதிபதியும் 10 ஆம் இடத்தில் லக்னாதிபதியும் இருந்து லக்னாதிபதிக்கு 7 ஆம் இடத்தில் குரு நின்று இருவரையும் பார்க்கும் அமைப்பை கார்முக யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள், கல்வி, கேள்வி, ஞானம், உள்ளவர்கள். இந்த யோகம் 27 வயது முதல் எட்டு ஆண்டுகள் நடைபெறும்.

கான யோகம்:

ஜாதகக் கட்டத்தில் 9 ஆம் இடத்துக்குரிய பாக்யஸ்தானதிபதி மூன்றிலிருந்து அவரை குரு பார்க்கும் அமைப்புக்குக் கான யோகம் என்று பெயர். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகமிருக்கும். 16 வயதுக்கு மேல் மூன்று ஆண்டுகள் இந்த யோகம் நடக்கும்.

கேதாரி யோகம்:

குரு, சந்திரன், சுக்கிரன் மூவரும் இரண்டிலிருக்க, அவர்கள் பாக்கியஸ்தானாதிபதி பார்க்க அமையப்பட்ட ஜாதகம் கேதாரி யோகம். இந்த யோகம் 52 வயதுக்குமேல் 7 வருடம் வரை நடந்து ஜாதகரை பிரபலமானவராக மாற்றும்.

கௌரி யோகம்

ஜீவனமான பத்தாமிடத்தில் (தொழில்ஸ்தானத்தில்) இருப்பவன் உச்சமாகி, அவனோடு லக்னாதிபதியும் இருக்கும் அமைப்புக்கு கௌரி யோகம் என்று பெயர். நற்குணம், பொன், பொருள் சேர்க்கையுடன் பெருமையுடன் வாழ்வார்கள். இந்த யோகம் 36 வயதுக்குமேல் 12 வருடம் வரை நடக்கும்.

சகரயோகம்

லக்னத்தில் சுபக்கிரகம் இருப்பதோ அல்லது பார்ப்பதாகவோ இருந்து, பஞ்சமாதிபதி பலத்துடன் நின்றால், அறிவாற்றல் மிக்கவராவார். வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் காணப்படும்.

சமுத்திர யோகம்

இரண்டாமிடம் முதற்கொண்டு ஒரு வீடு விட்டு மறு வீடுகளில் கிரகமிருந்தால் சமுத்திர யோகமாகும். பொன், பொருள் கொண்டு அதிகாரியாகவும் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும், புத்திர புத்திரிகளும் உண்டு. ஏழு, ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் சமுத்திர யோகமே. 53 வயது முதல் தொடங்கி யோகம் தரும் அமைப்பு இது.

சரிதாம யோகம்:

ஏழு ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்றிருக்க, இவர்களில் ஒருவருடன் சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி கூடியிருந்தால் சரிதாம யோகமாகும். அநேக வளங்களுடன் மேலான வாழ்க்கை வாழ்வர். இது முப்பது வயதுக்குமேல் அறுபதுவயதுவரை கூட நடக்கும்.

சடமகுடா யோகம்:

லக்னத்தில் உச்ச கிரகம் இருக்க மூன்றில் பாக்யாதிபதி இருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்த்தால் சடமகுடா யோகமாகும். இது 14 வயது முதல் தொடங்கி நடைபெறும்.

சல யோகம்:

லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருக்க, லக்னாதிபதி கேந்திர ஸ்தானத்திலிருக்க (1,4,7,10) லக்னாதிபதியை குரு பார்வையிட, அது சல யோகமாகும். ஜாதகரின் 17 வயதில் இந்த யோகம் தொடங்கும். இதிலிருந்து ஜாதகர் கல்வியில் மேன்மை பெற்று சகல சம்பத்துகளையும் பெற்றுத் திகழ்வார்..

சாமர யோகம்:

லக்னத்தில் சுபக்கிரகம் இருப்பதோ அல்லது லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதோ சாமர யோகமாகும். இதனால் செல்வப் பெருக்கு. செல்வாக்கு. கௌரவம் இருக்கும்.

சங்க யோகம்:

இரண்டுக்குரிய தனாதிபதி செவ்வாயைப் பார்க்க குரு, சந்திரன் இருவரும் ஏழுக்கு ஏழாக இருந்து ஒருவரை மற்றவர் பார்த்தாலும் சங்க யோகமாகும். மூன்றுக்குரியவன் 4க்குரிய உச்ச கிரகத்துடன்கூடி இருந்தாலும் இந்த யோகமாகும். வாக்கு வன்மையும், அறிவையும், வாகன யோகத்தையும் தந்து சிறப்பு தரக்கூடியது.

அர்த்த சந்திர யோகம்:

ஒன்பது கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அர்த்தச் சந்திர யோகமாகும். அழகிய தோற்றம், கவர்ச்சி, வாழ்க்கையில் வசதி, முன்னேற்றம், உயர்பதவி, அரசியல் செல்வாக்கு கிட்டும். இதனை வீணை யோகம் என்றும் சொல்வர்.

ஆதியந்த யோகம்:

லக்னாதிபதி திரிகோணமான 1, 5, 9 ஆகிய இடங்களிலோ அல்லது ஜீவன ஸ்தானமான பத்திலோ இருக்க, செவ்வாய் உச்சம் பெற்று மகரத்தில் இருக்க, 10க்குரியவன் 7ல் இருப்பது ஆதியந்த யோகமாகும். இதனால் உயரமான இடத்தில் பெரிய மாளிகை கட்டி தன் இனத்தாருக்குத் தலைவனாக பெருமையுடன் வாழ்வர்.

அனபா யோகம்:

சனிக்கும், சுக்கிரனுக்கும் மத்தியில் சந்திரன் நிற்பது அனபா யோகம். இப்படிப்பட்ட யோக அமைப்பு இருந்தால், ஆரோக்யம் வசதி. மதிப்பு, கௌரவம், அதிகாரம் இவை சேரும். சந்திரனுக்கு முன்னால் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகமுண்டு.

அமோக யோகம்

நான்கு சுபர்களும் கேந்திரமிருந்தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந்தாலோ அமோக யோகமாகும். எல்லா வகை அதிர்ஷ்டமும் உயர்ந்த வாழ்க்கையும் அமையும்.

உபஜெய யோகம்:

உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகம். இதை வசுமதி யோகம் என்பார்கள். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும்.

உபசரி யோகம்:

சூரியனுக்கு இருபுறமும் சுபக்கிரகங்கள் இருப்பது, உபசரி யோகமாகும். பலரும் மதிக்கும் நிலைக்கு உயரவைத்து பெருமைப்படுத்தும்.

எக்காள யோகம்:

நான்காமிடத்துக்கும் பத்தாமிடத்துக்கும் உரிய அதிபதிகள் கேந்திரத்தில் நின்று, அவர்களை லக்னாதிபதியை பார்ப்பது யோகமாகும். லக்னம் இரண்டு ஆகிய இடங்களில் பாவர் இருக்க 9ல் குரு, 10ல் சூரியன் நின்றாலும் எக்காள யோகமே. இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மற்றவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.நாளுக்கு நாள் செல்வம் பெருகும்.

கலாநிதி யோகம்:

3க்கும் 11க்கும் உரியவர்கள்கூடி ஏழிலும், ஏழுக்குரியவன் 12லும் 12க்குரிய விரயாதிபதி குருவுடன் கூடி பாக்கியத்திலும் நிற்பது கலாநிதி யோகமாகும். இதன் பலன் 16வயதுக்குமேல் எட்டு வருடம் வரை உயர் நிலையைத் தரும்.

காகள யோகம்:

லக்னாதிபதி இருந்த வீட்டுக்குரியவனும் சந்திரன் இருக்கும் வீட்டுக்குரியவனும் உச்சமாகி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானம் பெற்று வருவது காகள யோகமாகும். 28 வயதுக்கு மேல் இந்த யோகம் நன்மை செய்யும்.

சரணாகதியோகம்:

ஜோதிட சாஸ்திரத்தில் பலவகையான யோக அமைப்புகள் இருந்தாலும் 144 வகையான யோகங்களைத்தான் முக்கியமான யோகங்களாகச் சொல்வார்கள். அவற்றில் வித்தியாசமான சில யோக அமைப்புகளைப் பார்த்தோம். ஆனால், எந்த யோகமும் ஒருவருக்கு வேலை செய்யாமல் போனாலும் இறைவனிடம் நீயே சரண் என சரணாகதி அடைந்தால் போதும். அவர் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை விடுவித்துக் காப்பார்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala