வரன் முறை படுத்துதல் மனைகள்

அங்கீகாரம் பெற்ற மனைகள் எவை? எவை?

வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் என்பது என்னவென்றால் இந்த மனை பிரிவை இந்த ஊரோடு சேர்த்து கொள்கிறேன் என்று அர்த்தம்.

 

ஊரோடு சேர்ப்பது என்றால் என்ன ?

 

நீங்கள் வயகாட்டுக்கு நடுவிலோ, ஒரு மலை உச்சியிலோ வீட்டை கட்டிவிட்டு ,  அங்கு எனக்கு குடிநீர் , கரண்ட், ரோடு,தபால் எல்லாம் என்னை தேடி  வரவேண்டும். எனவே இவையெல்லாம் உருவாக்கி கொடுங்கள் என்று நீங்கள் கேட்டால்  அந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு எவ்வளவு அசௌகர்யமோ அதுபோல, ஒவ்வொருவரும்  அவரவர் இஷ்டத்துக்கு குடியிருப்பு மனைகளை கட்டிக்கொண்டால் ஊரே ஒழுங்கற்று  போய்விடும்.

 

குடியிருப்பு வீடுகளை எங்கு கட்ட கூடாது, எங்கு கட்ட வேண்டும் என்பதை, ஒழுங்குமுறைப்படுத்த ஒரு அங்கீகார அமைப்பு தேவைபடுகிறது.

 

விமான நிலையம் அருகில் இவ்வளவு உயரம் தான் கட்டிட அனுமதி, கடற்கரையில் 500  மீட்டருக்கு தள்ளி தான் வீடு கட்டி இருக்க வேண்டும். இந்த பகுதியில் தான்  தொழிற்சாலைகள் வர வேண்டும். இந்த பகுதியில் விவசாயம் நடக்க வேண்டும் , இந்த  பகுதியில் தான் கல்விக்கூடம் கட்டப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியையும்  ஒதுக்கி முன்கூட்டியே ஒரு மாஸ்டர் பிளானை போட்டு வைத்து இருப்பார்கள்  அங்கீகார அமைப்புகள்!

 

சென்னை & சென்னையை சுற்றி எதிர்காலம் கருதி CMDA லிமிடெட் என ஒரு  மாஸ்டர் பிளானை உருவாக்கி அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள்  மற்றும் கட்டிடங்களை நெறிபடுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA)  இயங்குகிறது.

 

CMDA தனது மாஸ்டர் பிளானை இன்னும் விரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம்,  வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுகா வரை நீடிப்பதற்காக அடிப்படை  திட்ட பணிகளை செய்து வருகிறது.

 

அதேபோல் வேலூர், திருச்சி, கோயம்புத்தூர் , ஈரோடு, சேலம், திருநெல்வேலி,  தூத்துக்குடி, மதுரை, போன்ற இரண்டாம் நகரங்களையும் அதன் சுற்று  வட்டாரத்தில் இருக்கும் பகுதிகளையும் இணைத்து உருவாக்கபட்டு இருக்கும்  மாஸ்டர் பிளான் பகுதிகளை கட்டுபடுத்த LPA (LOCAL PLANNING AUTHORITY) என்ற  அமைப்பு இயங்குகிறது.

 

மீதி தமிழகம் முழுவதும் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும் இரண்டு, மூன்று  மாவட்டங்களை ஒன்றிணைத்து அந்த பகுதிகளில் உருவாகும் மனைபிரிவுகள் ,  கட்டிடங்களை ஒழுங்குபடுத்த (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING )  DTCP என்ற அமைப்பு இயங்குகிறது.

 

DTCP யின் கட்டுபாட்டில் இயங்குகின்ற ஒரு தனிஅமைப்பு தான் LPA , அவர்கள் இரண்டாம் தர நகரங்களை மட்டும் கவனித்து கொள்கிறார்கள் .

மேற்படி CMDA ,LPA , DTCP அங்கீகாரத்தில் மனைபிரிவுகள் பல உருவாகி இருக்கின்றன.

 

அதைவிட அதிகமாக NOC பிளாட்டுகள் , பஞ்சாயத்து அங்கீகார மனைகள்,  அன்அப்ரூவ்டு மனைகள் என பல வீட்டு மனை பிரிவுகள் கடந்த இருபது ஆண்டுகளாக  தமிழத்தில் உருவாக்கபட்டு விற்பனை செய்யப்பட்டன.

பல ரியல் எஸ்டேட் அதிபர்களை கோடிஸ்வரர்களாக்கிய கற்பகவிருட்சம் இந்த  பஞ்சாயத்து அங்கீகார மனைகள். டிடிசிபி அங்கீகாரத்தில் அதிக விதிமுறைகள்,  அதிக காலதாமதங்கள், அதிக பொது இடம் விடுதல் போன்ற செயல்பாடுகள் அதிக செலவை  உருவாக்குவதால், பஞ்சாயத்து அங்கீகார மனைகளையே வியாபாரத்திற்கு கொண்டு  வந்தனர் பிளாட் புரொமோட்டர்கள்.

 

அடிமனை DTCP அங்கீகாரமாக இருந்து அது 2400 சதுர அடிக்குள் இருந்தால் அதில்  கட்டப்படும் வீடுகளுக்கு பில்டிங் அப்ரூவல் பஞ்சாயத்து தலைவர் கொடுக்கலாம்  என்று விதிகள் இருக்கிறது. அந்த ஒரு விசயத்தை வைத்து பஞ்சாயத்து அங்கீகாரம்  என்று மிக பெரிய ரியல் எஸ்டேட் சந்தை உருவாக்கப்பட்டது.

 

கிராம பஞ்சாயத்தில் ஒரு மனைபிரிவை அங்கீகாரம் பெறுகிறது தீர்மானம்  நிறைவேற்றி அதனுடைய நகலில் பஞ்சாயத்து தலைவர் கையெழுத்தும் முத்திரையும்  போட்டு அங்கீகார ஆவணங்களாக பொது மக்களிடையே வலம் வந்தன.

 

2006 களில் மாவட்ட ஆட்சியர்கள் கிராம பஞ்சாயத்துகளில் இப்படி தீர்மானம்  போடகூடாது என தடை செய்தனர்.அப்படி இருந்தும் 2016 வரை கிராம தலைவர்கள் பல  மனைபிரிவுகளுக்கு இதுபோல் அங்கீகாரம் சான்று கொடுத்து கொண்டுதான்  இருந்தார்கள்.

 

மேற்படி அங்கீகாரமற்ற மனைகளை பத்திரபதிவு அலுவலகங்களில் எந்தவித தடையோ  ஆட்சேபனையோ தெரிவிக்காமல் தொடர்ந்து பத்திரங்கள் பதிந்து கொண்டு இருந்தனர்.

 

இவற்றையெல்லாம் வரண்முறைக்கு கொண்டு வராவிட்டால் பல ஒழுங்கற்ற வீட்டு  மனைகள் உருவாகிவிடும் என்ற நோக்கத்தில் பஞ்சாயத்து அங்கீகார மனைகள், NOC  மனைகள், அங்கீகாரமற்ற மனைகள் என்று சொல்லபடுகின்றவைகள் பத்திரபதிவுகள்  செய்யகூடாது என தடை உத்தரவை நீதிமன்றம் 2016 ல் விதித்தது.

 

நீதிமன்ற தடை உத்தரவுக்கு பிறகு அரசு அனைத்து அங்கீகாரமற்ற மனைபிரிவுகளை  வரன்முறைபடுத்தி ஒழுங்கு படுத்த புதிய சட்ட விதிகளை உருவாக்கியது.

 

தனிநபர் தான் வாங்கிய மனைகளை வரன்முறைபடுத்துதல் மூலம் அங்கீகாரம்  பெறுதல்.மனை விற்பனையாளர் தன்னிடம் விற்காமல் இருக்கும் மீதி மனைகளை  வரன்முறைபடுத்தி அங்கீகாரம் பெறுதல் என வரன்முறை படுத்துவதற்கான பிரிவுகளாக  தற்போது இவை இருக்கிறது.

 

மேலும் புதியதாக லேஅவுட் அப்ரூவல் போனால் அது ரெகுலர் அப்ரூவல் , ஏற்கனவே  இருக்கிற பஞ்சாயத்து மனைகளை வரன்முறை அப்ரூவலுக்கு என்றால் அது ரேகுலசன்  அப்ரூவல் என்றும் சொல்லபடுகிறது.

 

வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் என்ற வேலை வந்தவுடன் அனைத்து அங்கீகார  அலுவலகங்களும் மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிக வேலைபளு உள்ள  அமைப்புகளாகவும் மாறிவிட்டது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு : 9841665836

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்