மிக அழகிய பாசுரம் ஓம் சிவாய நம

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

#ஐந்தாம்திருமுறை -#பொது-#சித்தத்தொகைழுத்திருக்குறுந்தொகை -#திருநாவுக்கரசர்
#97

#சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.
(2026)
- - - - -
பொருள் உரை:
"சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் ."
- - - - -

#அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர் உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம், வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.
(2027)
- - - - -
பொருள் உரை:
"அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் ."
- - - - -

#ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன் பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.
(2028)
- - - - -
பொருள் உரை:
"தன்னுடலிற்பாதி பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் , அனைத்துக்கும் ஆதி ஆகியவன் ; தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் ; மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்முடியை உடைய புண்ணியன் ."
- - - - -

#இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர் கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர், அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.
(2029)
- - - - -
பொருள் உரை:
"ஏற்றினை உகந்து ஏறிப் பட்டிதோறும் மக்கள் இட்ட சோற்றினைப் பலிதேர்வதாகிய ஒரு துன்பவாழ்க்கை உடையவனாகிலும் தேவர்கள் ` அட்டமூர்த்தியே ! அருள்வாயாக ` என்று அடைவர் ."
- - - - -

#ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-நீறு பூசி நிலாமதி சூடிலும், வீறு இலாதன செய்யினும், விண்ணவர், ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.
(2030)
- - - - -
பொருள் உரை:
"முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும் , தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும் , தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர் ."
- - - - -

#உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப் பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம் பிச்சையே புகும் ஆகிலும், வானவர், அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.
(2031)
- - - - -
பொருள் உரை:
"உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும் , தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும் , தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர் ."
- - - - -

#ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர் பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா! கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.
(2032)
- - - - -
பொருள் உரை:
"தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ! ஒன்றாக உரைக்கும் பேரில்லாதவனே ! பிறைசூடிய பிஞ்ஞகனே ! கருமை பொருந்திய திருக்கழுத்தினனே ! உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவையே என்றும் சேரும் ."
- - - - -

#எந்தையே! எம்பிரானே! என உள்கிச் சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்; வெந்தநீறு மெய் பூசிய வேதியன் அந்தமா அளப்பார், அடைந்தார்களே.
(2033)
- - - - -
பொருள் உரை:
"எந்தையே ! எம்பெருமானே ! என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் ; வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தன்மை உடையார் ."
- - - - -

#ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில் ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்; தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே வான நாடர் வணங்குவர், வைகலே.
(2034)
- - - - -
பொருள் உரை:
"பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போர்த்துத் தீயுடன் ஆடினாலும் , தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர் ."
- - - - -

#ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.
(2035)
- - - - -
பொருள் உரை:
"படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் , தலைவன் ; அந்தணன் ; ( அழகும் குளிர்ச்சியும் உடையவன் ) ஆண் பெண் வடிவமுடைய திருமேனியினன் ; மேன்மை மிகுந்த வெண் திருநீறு பூசிய கருமைகொண்ட திருக்கழுத்தினன் ; மான்குட்டி உடைய கையினன் ."
- - - - -

#ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்; இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்; அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல் பரவுவார் அவர் பாவம் பறையுமே.
(2036)
- - - - -
பொருள் உரை:
"இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும் , திருமாலும் பிரமனுமாகிய இருவராகி நின்றவர் அறிய இயலாதவனும் , அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந்த கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும் ."
- - - - -

#ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும், நாதனே, அருளாய்! என்று நாள்தொறும் காதல் செய்து கருதப்படுமவர் பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
(2037)
- - - - -
பொருள் உரை:
"கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் , ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும் , ` தலைவனே ! அருள்வாய் ` என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும் ."
- - - - -

#ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்; வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ! மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.
(2038)
- - - - -
பொருள் உரை:
"அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக ; மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள் ."
- - - - -

#அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல் புக்கு, பல்பலி தேரும் புராணனை-நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-தொக்க வானவரால்-தொழுவானையே.
(2039)
- - - - -
பொருள் உரை:
"அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள்தோறும் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும் , தொகுத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக ."
- - - - -

#கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன் திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்; இங்கணார், எழில் வானம் வணங்கவே; அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!
(2040)
- - - - -
பொருள் உரை:
"அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் ; இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் ; அதுவே அவர் தன்மை ."
- - - - -

#ஙகர வெல் கொடியானொடு, நன்நெஞ்சே!- நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில், மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.
(2041)
- - - - -
பொருள் உரை:
"நல்ல நெஞ்சே ! வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப்போதலுற்றால் , மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும் ."
- - - - -

#சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின், மரணம் எய்தியபின், நவை நீக்குவான் அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?
(2042)
- - - - -
பொருள் உரை:
"புகலடையத்தக்கவர் பிறர் யாவர் ? செயலற்று உயிர் இறக்கும்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன் ? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ ?
- - - - -

#ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம் சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்; கவனம் செய்யும் கன விடைஊர்தியான் தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.
(2043)
- - - - -
பொருள் உரை:
"நரகர்க்கெல்லாம் ஞமனாகியும் , நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும் , மான்குட்டி உடைய கையினனும் , விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனும் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும் ."
- - - - -

#இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்; அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப் பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை, கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!
(2044)
- - - - -
பொருள் உரை:
"இடபத்தின்மீது ஏறியும் , இல்லங்கள்தோறும் பலி ஏற்பவரும் , சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும் , ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக ."
- - - - -

#இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும், புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் அணைந்த, அம் சடையான் அவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.
(2045)
- - - - -
பொருள் உரை:
"கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் தூளினைச் சொரிந்திடும் இயல்பினதும் , பொருந்திய வாள்போன்ற பாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர் ."
- - - - -

#தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும் கருமம் தான் கருமான்மறிக் கையினான்; அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!- சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!
(2046)
- - - - -
பொருள் உரை:
"தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினை யாளர்களே ! தானே தருமமாகவும் , தானே தவமாகவும் , தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது , அரிய மருந்து போன்ற ( அமிர்தம் ) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைச் சேர்வீராக ."
- - - - -

#நமச்சிவாய என்பார் உளரேல், அவர்- தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால், அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும், இமைத்து நிற்பது சால அரியதே.
(2047)
- - - - -
பொருள் உரை:
"நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர் தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும் ."
- - - - -

#பல்பல் காலம் பயிற்றி, பரமனைச் சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்!தொல்வினை வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப் புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.
(2048)
- - - - -
பொருள் உரை:
"பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக ! உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக்கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும் ."
- - - - -

#மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்; கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால் பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம் பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!
(2049)
- - - - -
பொருள் உரை:
"கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும் , மான்குட்டியை உடைய கையினரும் , கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் ; அவ்வாறு புரியாது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர் ."
- - - - -

#இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர், நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான் மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்; வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.
(2050)
- - - - -
பொருள் உரை:
"வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன் , இயக்கர் , கின்னரர் , இந்திரன் , தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும் , பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான் ."
- - - - -

#அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப் பரவுவார் அவர் பாவம் பறைதற்கு, குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல் கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?
(2051)
- - - - -
பொருள் உரை:
"பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும் , குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ ?
- - - - -

#அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் தழலும் தாமரையானொடு, தாவினான், கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.
(2052)
- - - - -
பொருள் உரை:
"இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும் , வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல் ஊட்டியவனும் , எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திருமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டற்கரியவனுமாவான் ."
- - - - -

#இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார், வளமை போய், பிணியோடு வருதலால், உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான் கிளமையே கிளை ஆக நினைப்பனே.
(2053)
- - - - -
பொருள் உரை:
"இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ள மெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் ."
- - - - -

#தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்; தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில், தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.
(2054)
- - - - -
பொருள் உரை:
"தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான் ; தன்னில் தன்னை அறியும் அறிவிலனாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன் ."
- - - - -

#இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று அலங்கலோடு உடனே செல ஊன்றிய நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும் வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.
(2055)
- - - - -
பொருள் உரை:
"இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர் ."
- - - - -
#திருநாவுக்கரசர்

அரன் நாமம் சூழ்க நமச்சிவாய போற்றி

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி