மாஞ்சோலை ஊத்து குதிரைவெட்டி நாலுமுக்கு
#ஆசியாவின்_அழகுபூமி_மாஞ்சோலை
மாஞ்சோலை சுற்றுலா - திருநெல்வேலி..
கொளுத்தும் அக்னி நட்சத்திர 104 டிகிரி வெயிலில் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வந்தால் முதலை மூச்சு விடுகிறார்கள் பொதுமக்கள். காலை முதல் மாலை வரை வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பங்குனி, சித்திரையின் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் மக்களை நரக வேதனையில் தள்ளுகிறது.
இதிலிருந்து மீளுவதற்கு சிறிதளவு வெப்பம் தணிந்த குளிர்ச்சி கிடைத்தால் அதை சொர்க்கமாகவே கொண்டாடலாம்.
அந்த சொர்க்கத்தைத் தருகிறது நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம்.
தரைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 2800 அடி உயரத்திலிருக்கிறது மாஞ்சோலை. அதற்கும் மேலே 3800 அடி உயரத்தில் ஊத்து, அங்கிருந்து உயரமாக குதிரைவெட்டி, நாலுமுக்கு. மலைப் பிரதேசததிற்கு மேலே 4800 அடி உயரத்தில் அப்பர் டேம்.
சாதாரணமாக அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் 50 டிகிரி அளவு வெயிலின் உஷ்ணமிருந்தாலும் குளிர்ச்சியாகவே காணப்படுவை இந்த மாஞ்சோலை, குதிரைவெட்டி ஊத்து நாலுமுக்கு எஸ்டேட்கள். குளிர் காலமான நவம்பர் டிசம்பரில் மைனஸ் டிகிரிக்கும் கீழே வெப்ப நிலை போவதால் உறைபனி கொட்டும்.
தற்போதைய கோடையில் விடியும் போதே உறைபனி மூட்டத்துடன் தான் இந்த மலைப் பிரதேசம் விடியும் தனியார் கம்பெனிகளின் தேயிலை தோட்டங்கள் இருப்பதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அங்கே குடியிருப்புகளுடன் கூடிய வேலையில் இருக்கிறார்கள். டூரிஸ்ட்கள் தங்குவதற்கென வனத்துறையின் கெஸ்ட் ஹவுஸ்களும் உண்டு.
மாசு படாத சூழல், சுத்தமான மலைக்காற்றின் பிராணவாயு கிடைப்பதால் நாங்கள் ஆரோக்யத்துடனிருக்கிறோம் என்கிறார்கள் இந்த மலை மக்கள். 4800 அடி உயரத்திலிருந்து வாட்ச் டவர் மூலம் பார்த்தால் 112 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடியின் அனல்மின் நிலையத்தைப் பார்க்கலாம் அந்த அளவுக்குத் தொலைப் பார்வை வசதி உண்டு. கோடையைத் தணிக்கும் குளிர். மூலிகை மணத்தை வெளிப்படுதும் சம்ய சஞ்சீவி மரங்கள். ரம்மியமான சூழலைக் கொண்ட குளிர்ச்சி. கோடை நெருப்பை விரட்டும் மலைப் பகுதி.
போலாமா... மாஞ்சோலைக்கு.
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.
திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம். அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.
"மாஞ்சோலை' நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க பகுதியாகக் காட்சி தருகிறது. எங்கு நோக்கினும் தேயிலைத் தோட்டங்கள், காலை முதலே தேயிலை பறிக்கத் தொடங்கிவிடும் தொழிலாளர்கள், எப்போதும் குளுமையான சூழல். வனப்புமிக்க இந்த இடம் சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்படும் பகுதி.
காடுகளில் புலிகளும், யானைகளும், கரடிகளும், காட்டுப்பன்றிகளும் அவ்வப்போது வலம் வரும். "உடும்பு' என்ற ஓர் இனமும் இங்கு உண்டு. இராஜநாகம்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமப் பகுதிகளிலிருந்து வேலைக்காக இங்கு வந்து குடியேறியவர்கள்தாம். இவர்கள் தங்கி வேலை செய்வதற்காகத் தேயிலைத் தோட்ட நிர்வாகமே வீடுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இவர்களது வீட்டுக் கூரைகளின் மீது வரிசையாக மணற் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால், அடிக்கிற காற்றில் ஆகாயமே கூரையாகிவிடக் கூடாது என்பதற்காக இப்படி வைக்கப்பட்டுள்ளதாம். இங்கடிக்கும் குளிருக்கு சில வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதுதான் நமக்கு வியப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள இப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான விடுதி வசதிகள் எதுவும் இல்லாததால் காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பிவிட வேண்டியதுதான். இங்கு அவ்வப்போது மழை பெய்வதும், வெயில் அடிப்பதும், நல்ல காற்று வீசுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதுமே இதன் சிறப்பு.
சிறு அளவிலான உணவு விடுதிகள் உள்ளன. தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலையும், தேயிலைத் தோட்ட நிர்வாகமே நடத்தும் தொடக்கப் பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியும், அஞ்சலகமும் உள்ளன. வழக்கமாகச் சென்று வரும் பேருந்துகளில் சென்று வருவதற்கு அனுமதி தேவையில்லை. சொந்தக் காரிலோ, வாடகைக் காரிலோ செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்து ஒரு நாளைக்கு நான்கு முறையும், பாபநாசத்திலிருந்து 4 முறையும் இயக்கப்படுகின்றன. மாஞ்சோலையில் கிடைக்கும் தேயிலை சுவையாகவும், மணமாகவும் இருக்கிறது. தேயிலைத் தொழிற்சாலைகளில் அனுமதி பெற்றுத் தேயிலைப் பொட்டலங்களை விலைக்கு வாங்கலாம். அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள வாட்சிங் டவரில் ஏறி நின்று பார்த்தால் நாலாபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். மாஞ்சோலைக்கும் மேல் சுமார் 15 கி.மீ. சென்றால் ""ஊத்து'' என்ற பகுதியை அடையலாம்.
"ஆர்கேனிக் டீ' என்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படுபவை. விலை மிகுந்த தரமான இந்தத் தேயிலை இங்குள்ள "ஊத்து ஆர்கேனிக் டீ ஃபேக்டரி'யில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு வசிப்பவர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கல்லிடைக்குறிச்சிக்கு தான் செல்ல வேண்டும்.
மலைப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும். மாஞ்சோலைப் பகுதி முழுவதும் வனத்துறையைச் சார்ந்தது. இதில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிர்வாகமே அத்தனை தேயிலைத் தோட்டங்களையும் நிர்வகித்து வருகின்றது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம் கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழில் இன்னுமும் குறையாமல் இருக்கிறது.
நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கல்லிடைக் குறிச்சி வழியாக மாஞ்சோலை போகலாம். சாலை மார்கமாகச் செல்வோர் கல்லிடைக்குறிச்சியை அடைந்து அங்கிருந்து செல்லலாம். இங்கிருந்து சில அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனத்தில் செல்வதாக இருந்தால், மாஞ்சோலைக்கு போகும் முன் மணிமுத்தாறு செக் போஸ்ட் அருகே வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பதிவு: tamil tourism
Comments
Post a Comment