Saiva Siddhantham work Thirukkural

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

திரு.மு.க ஸ்டாலின் சொல்கிறார் வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என்று நாகசாமி சொல்கிறார்.தமிழர் பண்பாட்டையே திரிக்கிறார் எனவே அவரை நீக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில் தனித்தமிழர் பண்பாடு என்ற ஒன்று எது என்பதை பற்றி ஒரு விவாதத்தை திராவிடர் கழகமோ அல்லது அந்த சிந்தனையாளார்கள் தரப்பில் இருந்து திமுகவோ ஏற்படுத்த முனைய வேண்டும்.ஆனால் அதை செய்ய முன் வரமாட்டார்கள்.முழுக்க பொய்யும்,திரிபுவாதத்தையும் வசையையும் மட்டும் வைத்து கட்டியமைந்தது நாத்திக திராவிட சிந்தனை மரபு.இதை கும்பல் என்றும் சீழ்பிடித்திருக்கிற தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக போயிருக்கும் கூட்டம் என்று ஜெயகாந்தன் கூட வருணித்தார்.

திருவள்ளுவ மாலை சொல்லும் சில பாடலை பார்ப்போம்.

"நான் மறையின் மெய்ப்பொருளை நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய் தந்துரைத்த" 

பிரம்மன் திருவள்ளுவராக பிறந்து நான்கு வேதங்களின் உண்மை பொருளை முப்பாலால் தமிழில் கூறினான் திருக்குறள் வழி என்கிறார் உக்கிரப் பெருவழுதியார்.

"சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்--தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.

அறிடைய பலரால் எழுதப்பட்ட நூல்களையும்,தப்பாத வேதத்தினாலும் காப்பாற்றி வைத்திருந்து உலகத்தாருக்கு சொல்லப்பட்ட விஷயங்களெல்லாம் தன்னிடத்தே காட்டும்படி திருக்குறளை சொல்லிய திருவள்ளுவருக்கு ஒப்பாவது யார்? என்று புலவர் நல்லந்துவனார் கேட்கிறார்.

இன்னொரு புலவர் நல்கூர் வேள்வியார் சொல்கிறார் "வடமதுரைக்கு ஆதாரம் கீதை கூறிய கண்ணன்,தென்மதுரைக்கு ஆதாரம் குறள் கூறிய வள்ளுவன்"என்று.கீதையே திருநான் முடிபான உபநிடத கருத்தென்பதுதான் நமது கூற்று.

'ஓதற்கெளிதாய் உணர்தற் கரிதாகி 
வேத பொருளாற் மிக விளங்கி' என்று மாங்குடி மருதனார் சொல்கிறார்.வேதப்பொருளை எளிமையாக சொல்வது குறள் என்று அடித்து சொல்கிறார்.

"வேதப் பொருளை விரிகால் விரித்துலகோர் ஓதத் தமிழால் உணரச்செய்தார்" என்று செயலூர்க் கொடுங்கண்ணனார் சொல்கிறார்.வேதத்தின் உட்பொருளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் குறள் சொல்வதாக சொல்கிறார்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்,"முப்பாலுக்கு பாரதம் சீராமகதை மனுப் பண்டைமறை நேர்வன மற்றில்லை நிகர்" என்று சொல்கிறார்.அதாவது மகாபாரதம்,ராமாயணம்,மனும்ஸ்மிருதி,நால்வேதம் மட்டுமே இதற்கு நிகரானவை என்று போற்றுகிறார்.

எல்லாவற்றிற்கும் உச்சமாக ஔவை சொல்கிறார் "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்" என்று.

ஆகவே திருவள்ளுவர் பாரதத்தின் பழைமையான தர்ம சாஸ்த்திரம்,உபநிடதம்,வேதங்கள்,நீதிநூல்களை கற்றறிந்த பெரும் ஞானி.அந்த சாரங்களை தமிழ் மொழியில் எல்லோருக்கும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக படைத்துள்ளார் என்பதே எதார்த்தம்.

திருக்குறள் பிறவி,இறைவன்,ஒழுக்கம்,குலம் என்று எல்லாவற்றை பற்றியும் பேசக்கூடிய சநாதன வேர் உள்ள நேரடி நூலே.அதனால்தான் சைவசித்தாந்த பெருமணி குமரகுருபரர் "நீதிநெறி விளக்கம்,முதுமொழி மேல் வைப்பு,நீதி வெண்பா" என்று திருக்குறளை சுருக்கி அருளினார்.

சங்ககாலத்தில் இருந்தே மிகத்தெளிவாக வேதம்,வேள்வி சடங்குகளை தமிழ்சமூகம் கடைபிடித்துதான் வருகிறது.

"ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக" (புறம் 26) என்கிற புறப்பாடல் வரி சொல்வது என்னவென்றால் ஆராய்ந்த கேள்வியறிவும் ஐம்புலனடக்கிய நான்மறையுணர்ந்த சான்றோர் உறவு இருக்கிறது உனக்கு என்று பாண்டியனை புகழ்கிறது.

"பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் 
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன் இறந்தான்" என்று கரிகால சோழன் இறப்பை புறம் 224 பாடல் சொல்கிறது.

அதாவது வட்டவடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில் கருட சயனம்,வேள்வித் தூணையும் நட்டு வேள்விகள் பல செய்த அறிவுடையாளன் இறந்தான் என்கிறது.

பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற பழம் பாண்டியனையே பல யாகங்களை நடத்தியவனாக பெயரிலேயே குறிக்கிறது.புலவர் நெட்டிமையார் புறம் 15 வது பாடலில் இப்படி புகழ்கிறார்.அதாவது,

"உன்னை எதிர்த்து வந்து தோற்றோடிய எதிரிகள் அதிகமா? அல்லது நான்கு வேதம் கூறிய விதிப்படி நெய்யும்,சமித்தும்,பொரியும் இட்டு நீ செய்த வேள்விகளில் நடப்பட்ட வேள்வித் தூணின் எண்ணிக்கை அதிகமா? தெரியவில்லையே" என்று அவனின் எண்ணற்ற வெற்றியையும்,செய்த யாகத்தையும் குறிப்பிடுகிறார்.

தமிழனுக்கு மதமே இல்லை சங்கப்பாடல் தொடாங்கி திருக்குறள் வரை தனித்த கலாச்சாரத்தை சொல்கிறது என்று மதமாற்ற மிஷனரி கும்பலின் சதியைத்தான் திராவிட அரசியல்வாதிகளும் போலி தமிழறிஞர்களும் புகுத்தினார்கள்.அந்த சதியை முறியடிக்க திரு.நாகசாமி போன்றவர்களை நியமித்திருப்பது பாராட்டத்தக்கது.யோக்கியதை இருந்தால் திராவிட இயக்கங்கள் இதற்கு முறையான விவாத களத்தை ஏற்படுத்தி உரையாற்ற வர வேண்டும்.தன் புழுகு மூட்டைகளை திரிபுகளை ஆளில்லாத அரங்கிலும் அதிகார அத்துமீறலாலும் இறக்கி விடக்கூடாது.

#வேதம்முரைக்கும்_திருக்குறள்

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்