2019 Mesha Rashi Rashipalan

Adhithya Guruji # mesham
Mesham: 2019 New Year Palankal - மேஷம்: 2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புதுவருடமான 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்து முடிவில் அனைத்தையும் சரி செய்து நன்மைகளைக் கொடுக்கும் வருடமாக இருக்கும்.

இந்த வருடம் மார்ச் மாதம் 6-ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு.

மூன்றாம் இடம் என்பது உதவிகள் கிடைக்கும் சகாய ஸ்தானம் என்பதாலும், பாபக் கிரகமான ராகு மூன்றில் அமர்வது நன்மைகளைத் தரும் என்பதாலும் இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும்.

ராகுவின் தயவால் சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.

அடுத்து தற்போது சாதகமற்ற பலனைத் தரக்கூடிய இடமான எட்டில் இருக்கும் குருபகவான் அதே மார்ச் மாத இறுதியில் அதிசாரம் எனும் அமைப்பில் சில மாதங்களுக்கு, யோகம் தரும் ஒன்பதாமிடத்திற்கு மாறி பின் மீண்டும் தனது எட்டாம் நிலைக்கே திரும்பப் போகிறார்.

அதிசார நிலையில் இருக்கும் ஒரு கிரகம் தனது நல்ல, கெட்ட பலனை முழுமையாகத் தராது என்பது ஒரு விதி. அதன்படி மார்ச் மாதத்திற்குப் பிறகு மேஷத்திற்கு குருவின் எட்டாமிட சாதகமற்ற பலன்கள் இருக்காது. எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் நல்ல பலன்களை மட்டுமே உங்களுக்கு தருகின்ற வருடமாக இருக்கும்.

உங்கள் உடலும், மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் சந்தோஷம் தெரியும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களில் சிலருக்கு சென்ற காலங்களில் இருந்து வந்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இந்த வருடம் மாறும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள்  விலகி நல்லவைகள் இந்த வருடம் நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் இன்னும் மேன்மையான நல்ல பலன்கள் உண்டு.

மார்ச் மாதத்திற்குப் பிறகு வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதியான சூழல் இருக்கும்.

அனைத்து மேஷ ராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம் முழுவதும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் சுபத்துவ நிலைகளில் இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

நீண்ட நாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர்களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள்,  அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள்,  வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர்  போன்ற அனைத்துத் தரப்பினருக்கும்  இந்த வருடம்  நல்ல பலன்களைத் தரும்.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல்நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.

புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம் பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி  இருக்காது.

இதுவரை உங்களைப் பிடிக்காமல் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். அதிசார அமைப்பின் மூலம் ராசியை குரு பார்க்கப் போவதால் வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

கிரகநிலைமைகள் மேஷத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். மேஷ ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நல்லபடியாக நடக்கப் போகும் வருடம் இது.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்