திரு அதிகை வீரட்டானம் ஈஸ்வரன் கோவில் சென்றேன். மிக அருமை.
Subject: திரு அதிகை வீரட்டானம் ஈஸ்வரன் கோவில் சென்றேன். மிக அருமை.
#நோய்_தீர்க்கும்_திருப்பதிகம் #திருவதிகை
-
கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானத்தில் அருள்புரியும் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் மீது பாடிய இந்த பாடல் திருநாவுக்கரசரின் முதல் திருப்பதிகம் ஆகும். இதன் மூலம் திருநாவுக்கரசருக்கு சூலை நோய் என்னும் வயிற்றுவலி நீங்கியதாக வரலாறு கூறுகிறது. இத்திருப்பதிகத்தை பாடினால் வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
-
#இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர்
-
#இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி
-
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள் நீக்கியாரும் பிறந்தனர். மருள் நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்க முடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும்
-
"கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன் நான் அறியேன்..."
-
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
-
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 01
-
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒரு போதும் இருந்தறியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும் என்னீர் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 02
-
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்
படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய்பூச வல்லீர்
பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண்தலைகொண்டு
அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 03
-
முன்னம் அடியேன் அறியாமையினால்
முனிந்து என்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர்தம் கடன் ஆவதுதான்
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 04
-
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்
கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்
வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனலார் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 05
-
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்
உடலுள் உறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 06
-
உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 07
-
வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
வஞ்சம் மனம் ஒன்று இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லைச்
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 08
-
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்
அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 09
-
போர்த்தாய் அங்கோர் யானையின் ஈருரிதோல்
புறங்காடு அரங்கா நடம் ஆடவல்லாய்
ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என் வேதனையான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே. ..... 10
-
இந்தப் பதிகம் பாடிய பின்னர் மருள்நீக்கியாரின் சூலை நோய் முற்றிலும் நீங்கியது. நடந்த அதிசயத்தை உணர்ந்த நாயனார் சிவபிரானின் அருள் ஆகிய கடலுள் மூழ்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தான் சமண சமயத்தைச் சார்ந்து பிழை செய்த போதிலும் தன் மீது கருணை கொண்டு இறைவன் அருள் செய்ததை நினைத்து, மகிழ்ச்சியினால் அவரது திருமேனி முழுதும் உரோமங்கள் சிலிர்த்து நிற்க, கண்கள் இடையறாது ஆனந்தக் கண்ணீர் பொழிய, தரையின் மீது பலமுறை புரண்டு வீழ்ந்தார். சிவபிரானின் அருளைப் பெறுவதற்கு காரணமாக இருந்த சூலை நோயினுக்கு எவ்விதம் நன்றி சொல்வேன் என்று சூலை நோயினை வணங்கினார். அப்பொழுது செந்தமிழில் சொல்வளம் கொண்ட பாடலைப் பாடியதால் உமது பெயர் நாவுக்கரசர் என்று உலகினில் விளங்கும் என்ற ஒலி, அனைவரும் வியப்புறும் வண்ணம் வானில் எழுந்தது.
-
Visit as : http://thillai-ilanthendral.
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
Comments
Post a Comment