Murder fight between wife husband closed room court case argument

நடு இரவில் பூட்டப்பட்ட வீட்டிற்கு உள்ளே இருந்த கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, அந்த சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி கத்தியால் குத்திக் கொண்டதில், மனைவி உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் ஏற்பட்ட விதம் குறித்து எதிரி தான் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 106 ன்படி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு எதிரி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், எதிரி தான் அவருடைய மனைவியை கொலை செய்துள்ளார் என்றும், மருத்துவமனையில் எதிரி கொடுத்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தும், கணவனான எதிரி தான் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது சட்டப்படி தவறாகும். 
ஒரு நபருக்கு இறப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அளிக்கப்படும் வாக்குமூலம் தான் மரண வாக்குமூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த மரண வாக்குமூலத்தை அளித்த நபர் பின்னர் உயிர் பிழைத்து விட்டால் அதனை மரண வாக்குமூலமாக கருத முடியாது. அதேசமயம் அவரால் அளிக்கப்பட்ட மரண வாக்குமூலத்தை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவும் கருத முடியாது  ஏனெனில் ஒப்புதல் வாக்குமூலத்தை கு. வி. மு. ச பிரிவு 164ல் கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பதிவு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானது ஆகும். 
வீட்டிற்குள் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சில முக்கிய விஷயங்களை நுணுக்கமாக பரிசீலனை செய்ய வேண்டும். இறந்து போன மனைவியால் கணவனுக்கு முதலில் காயம் ஏற்பட்டதா? அல்லது கணவனால் மனைவிக்கு முதலில் காயம் ஏற்பட்டதா? என்கிற விஷயத்தை ஆழமாக பரிசீலிக்க வேண்டும். இந்த மாதிரி கொலைகளில் மூன்று வித கோணங்களை பார்க்க முடியும். ஒன்று கணவன் மனைவியை முதலில் குத்தியிருந்தால் அதற்கு பழிவாங்கும் விதமாக மனைவி கணவனை திரும்ப குத்தியிருக்கலாம். மற்றொன்று மனைவி முதலில் கணவனை குத்தியிருந்து அதற்கு பழிவாங்கும் விதமாக கணவன் மனைவியை குத்தியிருக்கலாம். மூன்றாவதாக ஒரே சமயத்தில் இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குத்தியிருக்கலாம். இவ்வாறான நிலையில் யார் முதலில் வலுச் சண்டைக்கு சென்றவர் (Aggresor) என்பதை அறிய வேண்டும். 
இதில் கணவன் தற்காப்புரிமையை (Private Defence) கோர முழு உரிமை உண்டு. ஒருவேளை கணவன் அந்த தற்காப்புரிமையை நீதிமன்றத்தில் கோரா விட்டாலும், அந்த வழக்கிலுள்ள சாட்சியங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் கணவன் தன்னை காத்துக் கொள்வதற்காக அந்த செயலை செய்துள்ளார் என்று நீதிமன்றம் கருதினால் கணவன் தற்காப்புரிமையை கோராமல் இருந்தாலும் அவருக்கு அந்த உரிமையின் பயனை நீதிமன்றம் வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் " James Martin Vs State of Kerala (2004-2-SCC-203)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது  கணவன், மனைவி இருவரும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் யார் சண்டையை முதலில் இழுத்தவர் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். யார் முதலில் சண்டையை இழுத்தது என்று அரசால் நிரூபிக்கப்பட முடியவில்லை என்றால் அந்த சந்தேகத்தின் பலனை எதிரியான கணவனுக்கு வழங்க வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்றம் "Bagavan Singh Vs State of M. P (2002-4-SCC-85)" என்ற வழக்கில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
எனவே ஒருவரை யூகத்தின் அடிப்படையில் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டிக்க கூடாது. ஒரு குற்றச் செயல் குறித்து எவ்வளவு பலமான சந்தேகம் இருந்தாலும், அந்த சந்தேகத்தை மெய்பிக்கப்பட்டதற்கு இணையாக கருத முடியாது. எனவே யூகத்தின் அடிப்படையில் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை அளிப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. A. NO - 166/2015, DT - 1.7.2016, Manickam Vs Inspector of police, Valappadi P. S, Salem District (2016-4-MLJ-CRL-356)

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி