Tuesday, 21 May 2019

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்விப்பது நம்பன் நக்கன் நாமம் நமச்சிவாயமே.

திருஞானசம்பந்தர் - குருபூஜை நாள் : வைகாசி – மூலம் 

🌼வாழ்க்கை குறிப்பு:
· இயற்பெயர் = ஆளுடையபிள்ளை
· பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மையார்
· ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)
· மனைவி = தோத்திரப் பூரணாம்பிகா
· வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்
· மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
· நெறி = மகன்மை நெறி
· ஆட்கொள்ளட்பாட இடம் = சீர்காழி
· இறைவனடி சேர்ந்த இடம் = திருநல்லூர் பெருமணம்
· இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்

🌺படைப்புகள்:
· 1,2,3 ஆம் திருமுறைகள்
· முதல் மூன்று திருமுறைகள் ="திருகடைகாப்பு" எனப் போற்றுவர்

🌷வேறு பெயர்கள்:
· ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
· திருஞானம் பெற்ற பிள்ளை
· காழிநாடுடைய பிள்ளை
· ஆணைநமதென்ற பெருமான்
· பரசமயகோளரி
· நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
· சத்புத்திரன்
· காழி வள்ளல்
· முருகனின் அவதாரம்
· கவுணியர்
· காழியர்கோன்
· ஞானத்தின் திருவுரு

💐நிகழ்த்திய அற்புதங்கள்:
ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்) = தன் திருமணத்திற்கு வந்தோர் அனைவரையும் சிவ ஜோதியில் கலக்க செய்து முக்தி அடைய வைத்தார். 
· திருமறைக்காடு = கோயில் கதவுகளை பாடித் முட வெய்த்தார்.
· திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
· திருமருகல் = பாம்பு தீண்டிய வணிகனின் விடம் நீக்கினார்
· திருவோத்தூர் = ஆண்பனையை பெண்பனை ஆக்கினார்
· மதுரை = தான் தங்கியிருந்த மடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப் பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை "நின்றசீர் நெடுமாறன்" ஆகினார்.
· மயிலாப்பூர் = குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.
· திருஏடகம் = வைகையாற்றில் இட்ட ஏடு கரை ஏறியது.
· திருப்பூந்துருத்தி = நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.
மற்றும் எண்ணற்ற ...

🌴இறைவனிடமிருந்து பெற்றவை:

· திருகோலக்காவில் = பொற்றாளம்
· திருவாடுதுறை = பொற்கிழி
· திருவீழிமிழலை = படிகாசு
· திருவாயிலறத்துறை = முத்துச்சிவிகை
· பட்டீஸ்வரம் = முத்துப்பந்தல்

🌼குறிப்பு:

· மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு "ஞானப்பால்" ஊட்டினார். அன்று முதல் இவர் "ஞானசம்பந்தன்" எனப் பெயர் பெற்றார்.
· இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறே சிவத்தலங்கள் சென்று பாடினார்.
· இவரின் அனைத்துப் பதிகங்களிலும் எட்டாவது பாடல் "இராவணன்" பற்றியும், ஒன்பதாவது பாடல் "மாலும் அயனும்" காண இயலாத சிவபெருமானின் பெருமையும், பத்தாவது பாடல் "சமண பௌத்த சமயங்கள்" துன்பம் தரும் தீங்கினை உடையன என்றும் பாடும் பாங்கினை கொண்டுள்ளன.
· அந்தணரான சம்பந்தர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த திருநீலகண்ட யாழ்பாணரை அழைத்து செல்வார்.
· இவர் தன்னை தானே "தமிழ் ஞானசம்பந்தன்" என அழைத்துக்கொள்வார்
· மதுரையில் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை தோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமண முனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
· இவரின் தோழர் = சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார்
· ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.
· கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181
· 220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
· சம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்

🍀சிறப்பு:
· தந்தை இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர் தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)
· திருநாவுக்கரசரை "அப்பர்" எனப் பெயர் இட்டு அழைத்தார்.
· இவரின் நெறி = மகன்மை நெறி
· இவரின் மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்
· சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், "வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்" எனப் பாராட்டினார்.
· தம் பாடல்களில் 23 பண் அமைத்துப் பாடியுள்ளார்.
· ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில் அமைத்துப் பாடியுள்ளார். எனவே இவரை, "சந்தத்தின் தந்தை" என்று கூறுவர்.
· யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திர கவிக்கும் முதன் முதலில் தொடங்கி வைத்தவர் சம்பந்தரே ஆவார்.
· சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் "பிள்ளை பாதி புராணம் பாதி" எனப் போற்றப்படுகிறது.
· இவர் "முருகனின் அவதாரமாகவே" கருதப்பட்டார்.
· யாழ முறி இவருக்கு மட்டுமே உரியது.

Tuesday, 30 April 2019

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.

 அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

#இன்ஷூரன்ஸ்_பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.  

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  

#மதிப்பெண்_பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?  

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.  

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை' என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். 

அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். 

இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

 தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 

பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

#ரேஷன்_கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.  

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை  

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

#டிரைவிங்_லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

#பான்_கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  

#பங்குச்_சந்தை_ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.  

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

 பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். 

சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

#கிரயப்_பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

 தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

#டெபிட்_கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.

 அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

#மனைப்_பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். 

இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.  

#பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 

20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். 

இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

#கிரெடிட்_கார்டு!

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். 

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.  

பா.வெ.

Saturday, 27 April 2019

எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டமாகிவிடும்?

எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டமாகிவிடும்?

 நன்கு அறிந்த நண்பர்களே, நாம் நாசமாய் போவதற்கு முதல் காரணமாக இருக்கலாம்.

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்.தனக்கு போகவே தானமும் ,தர்மமும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

கஷ்டத்தோடு கண்கலங்கி வந்து நின்று கடன் கேட்கும் பொழுது, இரக்கம் உள்ள மனிதர்கள் யாவரும் எளிதாக கடன் கொடுத்து விடுகின்றனர்.

கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது  அதே நன்றியுடன் பலர் நடந்து கொள்வதில்லை.

 கடன் வாங்கும்போது நாம் அவர்கள் வீட்டிற்கு நாயாய்  அலைந்தோம் அல்லவா? கடனை திருப்பி வாங்க அவர்கள் நம் வீட்டிற்கு அலையட்டும் என்ற மனப்பான்மையுடன் பலர் உள்ளனர்.

 மானம் மரியாதைக்கு பயந்து கடனை கண்ணியத்துடன் கட்டுபவர்கள் மிகக் குறைவு. 

 கடன் கொடுத்தவருக்கே விபூதி அடிப்பவர் பலர்.

1. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் ,சனி திசை ,சனி புத்தியில்  கடனாக கொடுத்த பணம்  திரும்பக் கிடைப்பது மிக அரிது.

2. ஏழரை சனியில் ,விரய சனியில் கொடுத்த பணமும் ஸ்வாகா.

3. ராகு திசையில் ராகு ,சனி புத்தியில் கொடுத்த பணமும் அம்பேல்.

4. அட்டமாதிபதி திசையில், அட்டமச் சனியில்  கொடுத்த காசு அபேஸ்தான்.

5.அதுபோல் விரையாதிபதி திசையில் ,6 ,8 ,12-க்குடைய புத்திகளில் ஏழரைச் சனி ,அட்டமச் சனி காலகட்டங்களில் நம்பி கொடுத்த பணமும் ஆற்றில் போடப்பட்ட பணமும் ஒன்றே. திரும்பக் கிடைப்பது மிக மிக கடினம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் யாருக்கும் ஜாமீனும் கொடுக்கக்கூடாது.

அது போல் சில நாட்கள் ,நட்சத்திரங்களில் கொடுத்த பணமும் திரும்ப வராது.

செவ்வாய்க்கிழமை கடனை அடைக்க நல்லநாள் என்றாலும் கடன் கொடுக்க நல்ல நாள் அல்ல.அதுபோல் வெள்ளிக்கிழமையும் கடன் கொடுக்க வேண்டாம்.

கார்த்திகை ,திருவாதிரை ,ஆயில்யம் , மகம் ,பூரம் சித்திரை, சுவாதி,விசாகம், கேட்டை ,மூலம் இந்த நட்சத்திரம் நடப்பில் இருக்கும் நேரத்தில் கடன் கொடுக்க வேண்டாம்.

அதுபோல் வெள்ளிக்கிழமை ,சுவாதி நட்சத்திரத்தில் கொடுத்த கடன் ஸ்வாகா. சுவாதி சுத்தமாக துடைத்து விடும். கவனம்.

நன்றி.

ஜோதிடர் ப.மாரிமுத்து .9788968519. வாட்ஸ் அப்.

Friday, 26 April 2019

எந்தநாள் நல்லநாள் auspicious day

 1. நல்ல நாள்

  #எந்தநாள்_நல்லநாள்:
  ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல்,
  காதுகுத்துதல், திருமணம் என்றுஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.  அப்படிப்பட்ட சமயங்களில்அனைவரும் தினசரி
  காலண்டரையோ அல்லதுபஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள்
  குறிப்போம். ஒருசிலர்ஏதாவது ஒரு ஜோசியர்அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு
  நல்ல நாள் குறிப்பார்கள்.
  மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாப்
  பார்த்து நாள் குறிக்காமல்அவரவர்ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை
  அடிப்டையாகக் கொண்டு நாமே நல்லநாள் பார்க்கலாம்.
  நாள் என்ன செய்யும்?
  நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும்சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும்அடங்கிய
  பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவதுகிழமை அல்லது நாட்கள்.
  பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
  என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.
  ஞாயிறு, திங்கள், புதன், வியாழன்,,வெள்ளி  ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம்,
  சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.
  செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால்செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான
  செயல்களுக்குரியது.
  சனிக்கிழமை இயந்திர சம்பந்தமானபணிகளுக்கு உரிய நாள்.
  ஞாயிற்றுக்கிழமை : சூரியன்ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால
  பிணிகளுக்கு மருத்துவர்ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம்.
  வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
  திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம்
  நடத்தலாம். காதுகுத்துதல், பெண்பார்த்தல், ருது சாந்தி செய்தல்
  (சாந்தி முகூரத்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களைசெய்யலாம்.
  ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும்செய்யலாம்.
  செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.
  வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல்,  செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது.
  செவ்வாய்க்கிழமைகளில் பொருள்வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால்
  வீட்டில் செல்வம் பெருகும்.
  புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம்செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப்
  பணிகளைத்துவங்கலாம்.  வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை
  சந்தித்தல்,
  புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல்,
  விதையிடுதல், அறுவடை செய்தல்,காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல்
  போன்றசுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலைபோன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.
  வியாழக்கிழமை : மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப்பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி,
  காதுகுத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச்செய்ய ஏற்ற தினம்.
  வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம்.
  காது குத்துதல், சாந்திமுகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல்,
  நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
  சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள்
  அதாவது வீடு, நிலம்,மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும்,இயந்திரங்கள்
  வாங்குதல் போன்றஇரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
  திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்;
  ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர்.
  சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது.
  சிலகிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப்பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  ஞாயிறு-
  பரணி, கார்த்திகை,மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம்,கேட்டை, பூரட்டாதி
  திங்கள்-
  சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
  செவ்வாய்: உத்திராடம்,திருவாதிர, கேட்டை, திருவோணம், அவிட்டம்,
  சதயம்
  புதன்-
  அவிட்டம், அசுபதி, பரணி,கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
  வியாழன்-
  கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
  வெள்ளி-
  பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம்,
  அவிட்டம்
  சனி-
  ரேவதி, புனர்பூசம், பூசம்,உத்திரம், அஸ்தம், ரேவதி
  ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.
  திதிகள் :
  திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
  1. பிரதமை, 2. துவிதியை, 3.திருதியை, 4. சதுர்த்தி, 5.பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12.துவாதசி, 13. திரயோதசி, 14.சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ)  அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
  அமாவாசை,பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்குதிதிகளினால் சிலசுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில
  கிழமைகளில் சிலதிதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
  நற்பலன் தரும் திதிகள் :
  ஞாயிறு-அஷ்டமி,
  திங்கள்-நவமி,
  செவ்வாய்-சஷ்டி,
  புதன்-திரிதியை;
  வியாழன்-ஏகாதசி,
  வெள்ளி-திரயோதசி,
  சனி-சதுர்த்தசி திதி.
  இத்தகையநாட்களில் வரும் திதிகளில் எந்தஒரு நல்ல காரியம் செய்தாலும் அது
  வெற்றியே கிட்டும்.
  சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள் :
  ஞாயிறு-சதுர்த்தசி,
  திங்கள்-சஷ்டி,
  செவ்வாய்-சப்தமி,
  புதன்-துவிதியை,
  வியாழன்-அஷ்டமி,
  வெள்ளி-நவமி,
  சனி-சப்தமி
  மேற்கூறியபடி குறிப்பிட்டநாட்களில் குறிப்பிட்ட திதிகள்வரும்போது அந்த நாட்களில்
  நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று
  செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
  வளர்பிறை, தேய்பிறை ஆகியகாலங்களில் சிலதிதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு.
  இத்திதிகளில்நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
  வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி
  திதிகள்.
  தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி,சஷ்டி, சப்தமி
  திதிகள்.
  ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை,தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு .
  அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும்செயல்கள் பூரண பலன் தராது. எனவே
  இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
  அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
  வளர்பிறை தேய்பிறை பஞ்சமி பிரதமை சஷ்டி அஷ்டமி சப்தமி நவமி சதுர்த்தசி தசமி பவுர்ணமி .....
  பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்:
  வளர்பிறை,  தேய்பிறை ஆகியஇரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி
  திதிகளையுமே தவிர்ப்பர்.
  அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தையநாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த
  நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும்.
  இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில்எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும்
  பொருள் நஷ்டம்,எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.
  நட்சத்திர பலன்கள் : பொதுவாகஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன
  நட்சத்திரம்என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள்ஏதாவது
  ஒன்றுதான்எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல்
  பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
  திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி,
  கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை,மகம்ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும்
  நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
  அதேநாட்களில்வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது.  கடுமையான நோய்வாய்ப் பட்டவர் அன்று சிகிச்சையைஆரம்பிக்கக் கூடாது.
  யோகங்கள் :
  பொதுவாக பலருக்கும்தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம்,
  மரணயோகம் எனும் மூன்று யோகங்கள்.இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை.
  பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா
  கிழமைகளிலும் நற்பலன்களைத்தரக்கூடியவையாகும்.
  அசுவினி-
  புதன், மிருகசீரிஷம்-
  வியாழன், பூசம்-
  வெள்ளி, சித்திரை-
  சனி, அனுஷம்-
  ஞாயிறு, மூலம்-
  புதன், உத்திராடம்-
  திங்கள், திருவோணம்-
  வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.
  ராகுகாலம் : சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள்.
  ஒவ்வொரு நாளிலும் சுமார்ஒன்றரை மணி நேரம்ராகுவுக்கு உரியதாக
  சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில்புதிய முயற்சிகளில்ஈடுபடுவதைத் தவிர்ப்பது
  நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதியமுயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
  ராகுகாலம் என்று எப்போது?
  ஞாயிறு  4.30 மணி முதல் 6.00 மணி வரை
  திங்கள் 7.30 மணி முதல் 9.00 மணி வரை
  செவ்வாய் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
  புதன் 12.00 மணி முதல் 1.30 மணி வரை.
  வியாழன்  1.30 மணி முதல் 3.00 மணி வரை
  வெள்ளி 10.30 மணி முதல்12.00 மணி வரை
  சனி 9.00 மணி முதல்10.30 மணி வரை.
  எமகண்டம்
  எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமானவிளைவினை ஏற்படுத்தக்கூடியது
  எனக்கருதபபடுகிறது.எமகண்ட நேரத்தில்ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து,
  பிரச்னைகள்ஆகியவற்றைஉருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையேதரும்.
  பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும்தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு
  நாளிலும்இருவேளைகளிலும் வரும் எமகண்டநேரத்தின் பட்டியல் இதோ...
  கிழமை                      பகல் நேரம்            இரவு நேரம்
  ஞாயிறு 12.00- 1.30
  6.00- 7.30
  திங்கள் 10.30-12.00
  3.00- 4.30
  செவ்வாய் 9.00-10.30
  1.30- 3.00
  புதன் ` 7.30- 9.00
  12.00- 1.30
  வியாழன் 6.00- 7.30
  10.30-12.00
  வெள்ளி ` 3.00- 4.30
  9.00-10.30
  சனி 1.30-3.00
  7.30- 9.00
  குளிகன் அல்லது குளிகை காலம்:
  குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
  அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள
  நேரமே குளிகை காலம்.தினசரி பகலில்ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி
  நேரமும்நடைபெறும். குளிகை காலத்தில்நற்காரியங்களை மட்டுமே செய்யலாம்.
  ஏனெனில் இந்த நேரத்தில்செய்யப்படும்செயல் தடை இல்லாமல்தொடர்ந்து
  நடைபெறும்என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத்தவிர்ப்பது அவசியம்.
  கரிநாள் : ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும்.
  இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
  மாதம் தேதிகள்
  சித்திரை 6, 15
  வைகாசி 7, 16, 17
  ஆனி 1, 6
  ஆடி 2, 10, 20
  ஆவணி 2, 9, 28
  புரட்டாசி 16, 29
  ஐப்பசி 6, 20
  கார்த்திகை 1, 10, 17
  மார்கழி 6, 9, 11
  தை 1, 2, 3, 11, 17
  மாசி 15, 16, 17
  பங்குனி 6, 5, 19
  வாரசூலை :
  வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர்.
  வாரசூலையை நிருவாணி சூலம்என்றும் களரி காலன் என்றும்அழைப்பதுண்டு.
  பகலில் வாரசூலை நேர்திசைகளிலும்இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று
  இருக்கும் என்பது ஜோதிட நியதி.
  வாரசூலை உள்ள திசையை நோக்கிப்பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம்
  செய்யவேண்டுமென்றால்பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார
  சூலைக்கானபரிகாரம் செய்வதுகுறிப்பிட்ட பரிகாரப் பொருளை
  சிறிதளவுஉண்டுவிட்டுப் பயணத்தைத்தொடங்குவது தான். சிலர்அப்பொருளை தானம்
  செய்வது வழக்கம்.
  தின ஓரையில் பயன்கள்:
  ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்தஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல்
  ஒவ்வொரு மணி நேரம்வரையில்ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம்
  நடைபெறும். அதைத்தான் அந்தகிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக்
  கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக்கிழமைக்கு உரியகிரகமே சூரிய உதய
  முதல் ஒரு மணி நேரத்துக்கானஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.
  உதாரணமாக  திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6
  மணி முதல் 7 மணிவரையில் சந்திரனே ஆதிபத்தியம்செய்வதால், அது
  சந்திரஓரையாகிறது.
  அடுத்தடுத்தஒரு மணி நேரம் உரியவரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது.
  அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரைஆரம்பாகிறது.
  இப்படியாககிரக ஓரைகள் ஒரு வட்டம் போலஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை.மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
  சூரிய ஓரை:
  விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப்பிரிவினை
  செய்தல்,வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன
  செய்யலாம்.
  சந்திர ஓரை:
  திருமணத்துக்கு நாள்குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை
  கற்றிட ஆரம்பித்தல்,  தொலைதூரப் பயணம் தொடங்குதல்,கால்நடைகள் வாங்குதல் நலம்
  தரும்.
  செவ்வாய் ஓரை:
  போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல்,போர் தொடுத்தால், வீடு மனை
  நிலம்வாங்குதல், விற்றல், மருந்துண்ணல்,ஏரிக்கரை அல்லது
  அணை கட்டுதல்செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
  புதன் ஓரை:
  ஜோதிட ஆராய்ச்சியில்ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல்,
  கடிதத்தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு
  ஆரம்பித்தல் செய்யலாம்.
  குரு ஓரை:
  புதிய ஆடை ஆபரணம்வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக்
  கொள்முதல்செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு
  உபதேசம்செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசிபெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
  சுக்கிர ஓரை:
  கலைகளைக் கற்கத்தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல்,
  காதல்புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல்செய்யலாம்.
  சனி ஓரை:
  உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு)
  அமைத்தல்,பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.சந்திராஷ்டமம் :
  நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தேகணக்கிடப்படுகிறது.
  அதாவது ஒருவர் பிறந்தபோது சந்திரன் எந்த ராசியில்இருக்கிறதோ, அதுவே அவரது
  ஜனனராசி என்றும்,சந்திர லக்கினம் என்றும்கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படிசந்திரன்ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டமஸ்தானத்தில் இருக்கும்காலமே அவரது சந்திராஷ்டம
  காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்அந்த சந்திராஷ்டம
  நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதியமுயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
  அவருக்கானசுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில்
  சேருதல்போன்ற மங்களநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர்
  பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம். (உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிகராசிக்கு உரியவிசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன்
  வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)
  2 அமாவாசை 2 பவுர்ணமி:
  அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல.அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம்என்பார்கள். இப்படிப்பட்டஅமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே
  வரும்.
  மல மாதத்தினை மட்டுமல்லாமல், மலமாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற
  நற்காரியங்களுக்குஏற்றதல்ல என்பது பொதுவிதி.
  ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள்வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி
  திதியில்சுபகாரியங்கள்மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது
  இல்லை.
  கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?
  1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது.
  (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
  2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர
  மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
  3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
  4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள்
  மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
  இது 4வது விதி.
  5. அடுத்த விதி. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு,
  மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்
  என்பது தான்.
  6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள்தவிர
  இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
  7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
  8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
  9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள்திருமண லக்கினத்துக்கும்
  மணமக்களின் ஜனனராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்
  பெற்றிருக்கக்கூடாது இது 9வது விதி.
  10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல்
  இருப்பது மிகமிக முக்கியமான விதி.
  11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23,
  2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
  12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும்
  கல்யாணம் பண்ணக்கூடாது.
  இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து
  சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர்
  குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள
  பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.
  அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட
  இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நன்றி

  Posted 17th February 2018 by mutamilse
   
Loading

கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள்

கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள்;

பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,மகம்,பூரம்,சித்திரை,சுவாதி,விசாகம்,கேட்டை ,பூராடம்,பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களில் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது .

நீண்ட தூர பயணம் ஆகாது.அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல் ஆகாது.இந்த நட்சத்திரங்களில் கடன் பெர்றவர் மீள்வதும்,கடன் கொடுத்தவர் திரும்ப பெறுவதும்,பயணம் செய்தவர் வெற்றியுடன் திரும்புவதும் ,மருத்துவம் வெற்றி பெறுவதும் கடினம்.

Homams and its benefits

□□□சில ஹோமங்களும் அதன் பயன்களும்□□□

1. கணபதி ஹோமம் : 
தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் : 
பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் : 
கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் : 
ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் : 
ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. மிருத்யுஞ்ச ஹோமம் : 
மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

7. புத்திர கமோஷ்டி ஹோமம் : 
புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

10. லக்ஷ்மி குபேர ஹோமம் : 
செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.

11. தில ஹோமம் : 
சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : 
நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. கண்திருஷ்டி ஹோமம் : 
திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

15. கால சர்ப்ப ஹோமம் : 
திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; 
சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

வாழ்க வளமுடன் 🙏🙏

மிக அழகிய பாசுரம் ஓம் சிவாய நம

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

#ஐந்தாம்திருமுறை -#பொது-#சித்தத்தொகைழுத்திருக்குறுந்தொகை -#திருநாவுக்கரசர்
#97

#சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.
(2026)
- - - - -
பொருள் உரை:
"சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் ."
- - - - -

#அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர் உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம், வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.
(2027)
- - - - -
பொருள் உரை:
"அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் ."
- - - - -

#ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன் பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.
(2028)
- - - - -
பொருள் உரை:
"தன்னுடலிற்பாதி பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் , அனைத்துக்கும் ஆதி ஆகியவன் ; தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் ; மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்முடியை உடைய புண்ணியன் ."
- - - - -

#இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர் கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர், அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.
(2029)
- - - - -
பொருள் உரை:
"ஏற்றினை உகந்து ஏறிப் பட்டிதோறும் மக்கள் இட்ட சோற்றினைப் பலிதேர்வதாகிய ஒரு துன்பவாழ்க்கை உடையவனாகிலும் தேவர்கள் ` அட்டமூர்த்தியே ! அருள்வாயாக ` என்று அடைவர் ."
- - - - -

#ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-நீறு பூசி நிலாமதி சூடிலும், வீறு இலாதன செய்யினும், விண்ணவர், ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.
(2030)
- - - - -
பொருள் உரை:
"முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும் , தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும் , தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர் ."
- - - - -

#உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப் பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம் பிச்சையே புகும் ஆகிலும், வானவர், அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.
(2031)
- - - - -
பொருள் உரை:
"உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும் , தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும் , தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர் ."
- - - - -

#ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர் பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா! கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.
(2032)
- - - - -
பொருள் உரை:
"தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ! ஒன்றாக உரைக்கும் பேரில்லாதவனே ! பிறைசூடிய பிஞ்ஞகனே ! கருமை பொருந்திய திருக்கழுத்தினனே ! உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவையே என்றும் சேரும் ."
- - - - -

#எந்தையே! எம்பிரானே! என உள்கிச் சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்; வெந்தநீறு மெய் பூசிய வேதியன் அந்தமா அளப்பார், அடைந்தார்களே.
(2033)
- - - - -
பொருள் உரை:
"எந்தையே ! எம்பெருமானே ! என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் ; வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தன்மை உடையார் ."
- - - - -

#ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில் ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்; தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே வான நாடர் வணங்குவர், வைகலே.
(2034)
- - - - -
பொருள் உரை:
"பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போர்த்துத் தீயுடன் ஆடினாலும் , தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர் ."
- - - - -

#ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.
(2035)
- - - - -
பொருள் உரை:
"படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் , தலைவன் ; அந்தணன் ; ( அழகும் குளிர்ச்சியும் உடையவன் ) ஆண் பெண் வடிவமுடைய திருமேனியினன் ; மேன்மை மிகுந்த வெண் திருநீறு பூசிய கருமைகொண்ட திருக்கழுத்தினன் ; மான்குட்டி உடைய கையினன் ."
- - - - -

#ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்; இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்; அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல் பரவுவார் அவர் பாவம் பறையுமே.
(2036)
- - - - -
பொருள் உரை:
"இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும் , திருமாலும் பிரமனுமாகிய இருவராகி நின்றவர் அறிய இயலாதவனும் , அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந்த கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும் ."
- - - - -

#ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும், நாதனே, அருளாய்! என்று நாள்தொறும் காதல் செய்து கருதப்படுமவர் பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
(2037)
- - - - -
பொருள் உரை:
"கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் , ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும் , ` தலைவனே ! அருள்வாய் ` என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும் ."
- - - - -

#ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்; வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ! மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.
(2038)
- - - - -
பொருள் உரை:
"அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக ; மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள் ."
- - - - -

#அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல் புக்கு, பல்பலி தேரும் புராணனை-நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-தொக்க வானவரால்-தொழுவானையே.
(2039)
- - - - -
பொருள் உரை:
"அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள்தோறும் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும் , தொகுத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக ."
- - - - -

#கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன் திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்; இங்கணார், எழில் வானம் வணங்கவே; அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!
(2040)
- - - - -
பொருள் உரை:
"அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் ; இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் ; அதுவே அவர் தன்மை ."
- - - - -

#ஙகர வெல் கொடியானொடு, நன்நெஞ்சே!- நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில், மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.
(2041)
- - - - -
பொருள் உரை:
"நல்ல நெஞ்சே ! வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப்போதலுற்றால் , மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும் ."
- - - - -

#சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின், மரணம் எய்தியபின், நவை நீக்குவான் அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?
(2042)
- - - - -
பொருள் உரை:
"புகலடையத்தக்கவர் பிறர் யாவர் ? செயலற்று உயிர் இறக்கும்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன் ? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ ?
- - - - -

#ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம் சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்; கவனம் செய்யும் கன விடைஊர்தியான் தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.
(2043)
- - - - -
பொருள் உரை:
"நரகர்க்கெல்லாம் ஞமனாகியும் , நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும் , மான்குட்டி உடைய கையினனும் , விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனும் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும் ."
- - - - -

#இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்; அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப் பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை, கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!
(2044)
- - - - -
பொருள் உரை:
"இடபத்தின்மீது ஏறியும் , இல்லங்கள்தோறும் பலி ஏற்பவரும் , சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும் , ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக ."
- - - - -

#இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும், புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் அணைந்த, அம் சடையான் அவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.
(2045)
- - - - -
பொருள் உரை:
"கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் தூளினைச் சொரிந்திடும் இயல்பினதும் , பொருந்திய வாள்போன்ற பாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர் ."
- - - - -

#தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும் கருமம் தான் கருமான்மறிக் கையினான்; அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!- சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!
(2046)
- - - - -
பொருள் உரை:
"தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினை யாளர்களே ! தானே தருமமாகவும் , தானே தவமாகவும் , தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது , அரிய மருந்து போன்ற ( அமிர்தம் ) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைச் சேர்வீராக ."
- - - - -

#நமச்சிவாய என்பார் உளரேல், அவர்- தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால், அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும், இமைத்து நிற்பது சால அரியதே.
(2047)
- - - - -
பொருள் உரை:
"நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர் தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும் ."
- - - - -

#பல்பல் காலம் பயிற்றி, பரமனைச் சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்!தொல்வினை வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப் புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.
(2048)
- - - - -
பொருள் உரை:
"பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக ! உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக்கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும் ."
- - - - -

#மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்; கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால் பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம் பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!
(2049)
- - - - -
பொருள் உரை:
"கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும் , மான்குட்டியை உடைய கையினரும் , கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் ; அவ்வாறு புரியாது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர் ."
- - - - -

#இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர், நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான் மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்; வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.
(2050)
- - - - -
பொருள் உரை:
"வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன் , இயக்கர் , கின்னரர் , இந்திரன் , தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும் , பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான் ."
- - - - -

#அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப் பரவுவார் அவர் பாவம் பறைதற்கு, குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல் கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?
(2051)
- - - - -
பொருள் உரை:
"பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும் , குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ ?
- - - - -

#அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் தழலும் தாமரையானொடு, தாவினான், கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.
(2052)
- - - - -
பொருள் உரை:
"இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும் , வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல் ஊட்டியவனும் , எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திருமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டற்கரியவனுமாவான் ."
- - - - -

#இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார், வளமை போய், பிணியோடு வருதலால், உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான் கிளமையே கிளை ஆக நினைப்பனே.
(2053)
- - - - -
பொருள் உரை:
"இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ள மெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் ."
- - - - -

#தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்; தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில், தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.
(2054)
- - - - -
பொருள் உரை:
"தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான் ; தன்னில் தன்னை அறியும் அறிவிலனாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன் ."
- - - - -

#இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று அலங்கலோடு உடனே செல ஊன்றிய நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும் வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.
(2055)
- - - - -
பொருள் உரை:
"இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர் ."
- - - - -
#திருநாவுக்கரசர்

அரன் நாமம் சூழ்க நமச்சிவாய போற்றி

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்விப்பது நம்பன் நக்கன் நாமம் நமச்சிவாயமே.

திருஞானசம்பந்தர் - குருபூஜை நாள் : வைகாசி – மூலம்  🌼வாழ்க்கை குறிப்பு: · இயற்பெயர் = ஆளுடையபிள்ளை · பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மை...