GST for return failed cheques Indian banks

"உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...
அப்படி என்ன பிரச்னை...?"

ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்....

சரி.....

அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு...

சரி....

பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான், 354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்...

என்ன சொன்னாங்க...?

300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ, 54 ரூபாய் GST ன்னான்.

அடப்பாவிகளா...

நீ டென்ஷனாயிடாமக் கேளு...
300 ரூபாயே பெரிய கொள்ளை. 
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்...

என்னாச்சு...

அவன் உடனே வந்து 1000 ரூபாய குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான்....எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு...

எப்படி...?

அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18%  GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்...

அட் அநியாயமே...

1000 ரூபாய் வரவு செலவுல ஒரு சிறு தவறுக்கு  ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய். 

ஒரே செக்குக்கு ரெண்டு இடத்தில் ஃபைன் வித் ரெண்டு GST. இதுக்கு பேரு டிஜிடல் தேசமாம், நாடு முழுதும் ஒரே வரியாம். நம்மள எவ்வளவு கூமுட்டை ஆக்குறாங்கன்னு நினைச்சு நினைச்சு பிரஷ்ஷர் 190க்கு போயிருச்சு.  அதான் ஆஸ்பத்திரிக்கு போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்...

சரி..சரி...டென்ஷனாகாதீங்க...ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க...நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன்....லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க....

இதைத்தான் அன்றே #பிசிராந்தையார்
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்...

அப்பாடலினை படித்து பார்த்தால் தான் அதன் அர்த்தம் விளங்கும்,  
இதோ அப்பாடல்,

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பாடியவர்: பிசிராந்தையார் 
– #புறநானூறு_184

இதன் விளக்கம்:

மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை  பல நாட்களாக  உண்ணும். 

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியை திரட்ட விரும்பினால் யானை புகுந்த நிலம் போல தானும் கெட்டு தன் நாட்டையும் கெடுப்பான்.

இப்போது புரிகிறதா...!!!!
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று...!

தற்போது இந்த பதிவுதான் முகநூலிலும், வாட்சப்பிலும் வைரலாகி பகிரப்படுகிறது.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி