சமணர் சாக்கியர் ஒழிப்பு

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

#ஐந்தாம்திருமுறை -#திருப்பழையாறைவடதளி -#திருக்குறுந்தொகை -#திருநாவுக்கரசர்
#58

#தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்- நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே? அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!
(1652)
- - - - -
பொருள் உரை:
"தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக ."
- - - - -

#மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு ஆக்கினான் அணி ஆறை வடதளி நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.
(1653)
- - - - -
பொருள் உரை:
"மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி , அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை ."
- - - - -

#குண்டரை, குணம் இல்லரை, கூறை இல் மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை; அண்டரை; பழையாறை வடதளிக்  கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே.
(1654)
- - - - -
பொருள் உரை:
"குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , உடை யணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும் , தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீலகண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன ."
- - - - -

#முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை, கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்- படையரை; பழையாறை வடதளி உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.
(1655)
- - - - -
பொருள் உரை:
"முடைநாற்றம் உடையோரும் , தலையை மழித்த மொட்டையர்களும் , கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும் , கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது ."
- - - - -

#ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும் கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை, அள்ளல் அம் புனல் ஆறை வடதளி வள்ளலை, புகழத் துயர் வாடுமே.
(1656)
- - - - -
பொருள் உரை:
"ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும் , கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச் சேறாகிய நீர்வளம் உடைய பழையாறைவடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும் ."
- - - - -

#நீதியைக் கெட நின்று அமணே உணும்  சாதியைக் கெடுமா செய்த சங்கரன்,  ஆதியை, பழையாறை வடதளிச் சோதியை, தொழுவார் துயர் தீருமே.
(1657)
- - - - -
பொருள் உரை:
"முறைமை கெட நின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும் , ஆதியும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும் ."
- - - - -

#திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்- பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை, அருள்-திறத்து அணி ஆறை வடதளித் தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.
(1658)
- - - - -
பொருள் உரை:
"திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை . அருள் திறத்தை உடைய அழகுபொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும் ."
- - - - -

#ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண் வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை பாதனை, பழையாறை வடதளி நாதனை, தொழ நம் வினை நாசமே.
(1659)
- - - - -
பொருள் உரை:
"அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும் , வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம் ."
- - - - -

#வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான் பாய் இரும் புனல் ஆறை வடதளி மேயவன்(ன்)ழு என வல்வினை வீடுமே.
(1660)
- - - - -
பொருள் உரை:
"மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும் , பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லு மளவிலேயே வல்வினைகள் கெடும் ."
- - - - -

#செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.
(1661)
- - - - -
பொருள் உரை:
"போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும் , பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள்வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும் ."
- - - - -
#திருநாவுக்கரசர்

அரன் நாமம் சூழ்க நமச்சிவாய போற்றி

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி